இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை:கூட்டமைப்பு

இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் கௌரவமான தீர்வொன்று எட்டப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்பும் தமிழகத்தின் ஆதரவும் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.    new-Gif

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வன்முறை நிறுத்தப்பட்டபோதும், சமத்துவம், நீதி, உண்மையான தீர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிணக்குகளுக்கு நிரந்தரமாக தீர்வினைக் காண்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகியதாக தனது கடிதத்தில் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வொன்றை கொண்டுவருவதாக இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதி துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றப்படவில்லை என தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே அனுப்பியிருந்த கடிதத்தின் பிரதியொன்றையும் இரா.சம்பந்தன் ஜெயலலிதாவின் கவனத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 ஆசனங்களில் 37 ஆசனங்களை வெற்றிகொண்டதன் மூலம் இந்திய மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சியாக மிளிரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தொடர்ந்தும் காட்டிவரும் சிரத்தைக்காக நன்றிகளைத் தெரிவிப்பதுடன், உறவுகளை வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை வெகு விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறும் தனது கடிதத்தில் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவினருடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குட்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார்.

அதனை அடுத்து நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்த கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது, மாநில அரசுகளின் கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்படும் என, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

.600x150-benner11

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*