இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன. தேர்தலுக்கான சரியான கால நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இம்முறை எதிரணியினர் அதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.      new-Gif

 ஆளும் தரப்பைப் பொறுத்த வரையில் தற்போதைய ஜனாதிபதிக்கு மாற்றீடான வேட்பாளர் ஒருவர் இல்லாததால் அந்தப் பக்கம் சலசலப்பு எதுவும் காணப்படவில்லை.

ஒருவர் இரண்டு தடவைகளுக்கு அதிகமாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிக்கலாம் என்றதொரு நிலை உரு வாகியுள்ளதால், இம்முறை இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரும் அடிபடுவதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து காணப்படுகின்றனர்.
போர் வெற்றி குறித்த மாயை பெரும்பான்மையின மக்களிடையே மறைந்து போகும் வரை மஹிந்த தமது வெற்றி குறித்து அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் போர் வெற்றிக்கு அப்பாலும் சிங்கள மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் நிலைமை தொடர்ந்து இவ்வாறே இருக்குமென அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் போர்  ஓய்ந்த ஐந்து வருட காலப் பகுதிக்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
மக்கள் போரை ஓரளவு மறந்து வேறு பிரச்சினைகள் தொடர்பாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றமும், ஆளும் தரப்பினரின் நடவடிக்கைகளும் அவர்களின் மனதில் வெறுப்பை விதைக்க ஆரம்பித்து விட்டன. நடைபெற்று முடிந்த இரண்டு மாகாணசபைத் தேர்தல்களின் முடிவுகள் இதை எடுத்துக்காட்டி விட்டன.
ஜனாதிபதியின்  சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில்  அரசதரப்புக்கு ஏற்பட்ட வீழ்ச்சி கவனத்தில் கொள்ளத்தக்கது. மிகவும் பின்தங்கிய  மாவட்டமான அம்பாந்தோட்டை, கொழும்புக்கு நிகரான வகையில் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. புதிய துறைமுகம், சர்வதேச விமான நிலையம், மாநாட்டு மண்டபம், விளையாட்டு அரங்கு, உலகத்தரம் வாய்ந்த வீதிகள் என இந்த மாவட்டம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது.
சர்வதேச அளவிலான மாநாடுகள் கூட இங்கு சிறப்பாக நடந்தேறியுள்ளன. ஏனைய இடங்களைச் சேர்ந்தவர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு ஜனாதிபதி தமது சொந்த இடத்தை அபிவிருத்தி செய்து வருகின்றார். ஆனால் எதிர்க் கட்சியினரோ பெருமளவு நிதி வீணான வகையில் விரயமாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் ஆகியவற்றை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அம்பாந்தோட்டை மக்களும் இந்த அபிவிருத்திகளால் தாம் திருப்தியடையவில்லை என்பதை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர். ஏனென்றால் இங்கு ஆளும் கட்சியினரின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி கூட சிறிதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ஆனால் இதனால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேலைகளில் இப்போதே ஈடுபடத் தொடங்கிவிட்டனர். பொருத் தமானதொரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்து இதே ஈடுபாட்டுடன் அவர்கள் செயற்படுவார்களானால்  வெற்றிக்கனி அவர்களின் கையில் விழக்கூடும். இதேவேளை பதவிச் சுகத்தை அனுபவித்து அதில் திளைத்த ஆளும் தரப்பினர் அவ்வளவு எளிதில் ஜனாதிபதிப் பதவி கைமாறுவதை அனுமதிக்க மாட்டார்கள். பல்வேறு தடைகளை ஏற்படுத்தவே அவர்கள் முயல்வார்கள்.
ஜனநாயக நாடொன்றில் தேர்தல்கள் உயிர்நாடியாகத் திகழ்கின்றன. மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் தாம் விரும்பியவர்களைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை இந்தத் தேர்தல்கள் வழங்க வேண்டும். உண்மையாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் இடம்பெறும் போதுதான் ஒரு நாட்டின் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும். அதிகார பலமும், பணபலமும் தேர்தல்களில் புகுந்து விளையாடும் போதும் அது தேர்தலையே அர்த்தமிழந்ததாக்கிவிடும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் காலம் என்பது சோதனைகள் நிறைந்தனவாகவே  காணப்படுகின்றது. மேலும் சுதந்திரமானதொரு தேர்தல் ஆணையம் அமைக்கப்படாததால் தற்போதைய தேர்தல் ஆணையாளர் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலையில் கட்டுண்டு கிடக்கின்றார். அவரும் ஒரு சாதாரண அரச பணியாளர் போன்றே அரசுக்குக் கட்டுப்பட்டுத் தமது பணிகளை ஆற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் காணப்படுகின்றார்.
பல்வேறு சோதனைகளையும், இடர்களையும் தாண்டி எதிரணி வேட்பாளர் ஒருவர் இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின், முதலில் மிகப் பொருத்தமானதொரு வேட்பாளரொருவர் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை நல்கவும் வேண்டும். ஏனென்றால் எதிர்க்கட்சியினர் பிளவுபட்டு நின்றால் அது ஆளும் தரப்பினருக்கு மீண்டும்  வாய்ப்பாக அமைந்து விடும்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் ´ராணி பண்டாரநாயக்க ஆகியோரின் பெயர்கள் தற்போது பலமாக அடிபட ஆரம்பித் துள்ளன. இவர்களில்  திருமதி ´ராணி பண்டாரநாயக்க தவிர்ந்த ஏனைய மூவரும் அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள்.
திருமதி சந்திரிகா இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவராவார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோர் தோல்வியையே தழுவிக் கொண்டனர். பிரதம நீதியரசராகப் பதவி வகித்த திருமதி ´ராணி பண்டார நாயக்கா பதவி நீக்கம் செய்யப்பட்ட விதம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகின்றது. அரசு தரப்பிலிருந்து என்னதான் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதன் நம்பகத்தன்மை இன்னமும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பெயரும் சிலரால் பிரஸ்தாரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சாத்தியமில்லாத முயற்சியயான்றாகவே இதனைக் கருத முடியும். ஏனென்றால் தமிழர் ஒருவர் ஜனாதிபதி பதவியில் அமர்வதற்கான பொதுமக்களின்  மனப்பக்குவம் இந்த நாட்டில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதை மறந்து எவராவது செயற்பட்டால் எதிர் விளைவுகளே ஏற்படும். ஆகவே இதை இப்போதைக்கு மறந்து விடுவதே நல்லது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எத்தகைய மூலோபாயங்களைப் பிரயோகிப்பதற்கும் தயங்கமாட்டார். ஏனென்றால் சிலவேளை தேர்தலில் தோல்வியுற்றால் அதனால் கிடைக்கும் பலாபலன்கள் தொடர்பாக அவரைவிட வேறு எவரும் அதிகம் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே தேர்தலின் போது தாம் வெற்றி பெறுவதற்காக ஆளும் தரப்பினர் சகல வழிகளிலும் முயற்சி செய்வார்கள் என்பதில் ஐயமே இல்லை.
ஆகவே எதிரணியினர் இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் முதலில் அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் நாடித்துடிப்பை அறிந்து சிறந்ததொரு பொது வேட்பாளரை நியமிக்க வேண்டும். அத்துடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்படவேண்டும். முக்கியமாக பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை ஒருசேரப் பெற்றுக் கொள்வதில் வெற்றி பெற வேண்டும். அத்துடன் ஆளும் தரப்பினரின் எத்தகைய இடையூறுகளையும் தகர்த்தெறியும் துணிவு வேண்டும். இதுவெல்லாம் ஒருங்கு சேரும் போது தான் வெற்றி என்பது சாத்தியமாக மாறும்.
.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*