புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் ;ஜனாதிபதி அழைப்பு

புதியதாய் நாட்டில் தோற்றம் பெற்றுள்ள சகவாழ்வு மற்றும்new-Gif1 நல்லிணக்கத்தின் இனிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு புதிய அரசாங்கம் பலமான நிலையில் உள்ளது. எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக அணிதிரளுமாறு ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஓராண்டு காலத்திற்குள் சர்வதேசத்தை வெற்றிக்கொண்டமை எமது வேலைத்திட்டத்தின் பாரிய வெற்றியாக குறிப்பிடலாம்.

தற்போது உலகின் அனைத்து நாடுகளும் இலங்கையின் நட்பு நாடுகளாக மாறியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பூரண ஆசீர்வாதமும் இலங்கைக்கு கிடைக்கபெற்றுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கைக்கு கிடைக்கபெற்றுள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சர்வதேச ஒத்துழைப்புடன் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடல் வேண்டும் .

நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும்போது உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஜேர்மனிக்கான விஜயத்தின் போது வர்த்தக, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளின் ஓர் இனிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என்று நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

எமது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறுபட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்ட வண்ணமுள்ளன. இருந்தபோதிலும் இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு புதிய அரசாங்கம் பலமான நிலையில் உள்ளது.

எனவே எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக அணிதிரள வேண்டும். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் சர்வதேசத்தில் சிறந்த நாடாக மலர செய்வதற்கும் புலம்பெயர்ந்தவர்களும் நாட்டில் வாழும் இலங்கையர்களும் பூரண ஒத்துழைப்பினை எமக்கு வழங்க வேண்டும் என்றார்.

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களான சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தோர் இதில் கலந்துகொண்டனர். இலங்கையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*