சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: திருமணத் தரகர் கைதாகி விளக்கமறியலில்!

பாடசாலைச் சிறுமிகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துவந்ததார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 60 வயது திருமண தரகர் ஒருவர் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  நேற்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிவான் பஸீர் முகமட் உத்தரவிட்டார்.

10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளை குறித்த திருமண தரகர் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்துவந்ததார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சிறுமிகளும் பாடசாலை செல்லாமல் இருந்துள்ளனர்.

இவர்கள் பாடசாலை செல்லாமை குறித்து கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரின் கவனத்திற் கொண்டுவரப்பட்டது. அவர் மேற்கொண்ட விசாரணைகளின்போதே இரு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு வந்தமை தெரியவந்தள்ளது.

குறித்த தரகர் திருமணப் பொருத்தம் குறித்த விடயம் தொடர்பாக அடிக்கடி சிறுமிகளின் தந்தையை சந்திக்க வருவார் எனவும் இதன்போதே அவர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, குறித்த இரு சிறுமிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.