தமிழர்களாகிய நாங்கள் தற்பொழுது எதை நோக்கிப் பயணிக்கின்றோம் ? – தமிழ்நேயன்.

தமிழர்களாகிய நாங்கள் தற்பொழுது மாயை அரசியல் உலகத்தில் சிக்கி தவிக்கின்றோம். சர்வதேச அரசியலுக்கமைய  இருக்கவேண்டிய நமது new-Gif1அரசியல் பாதை என்றும்  இலங்கை அரசுடன் ஒத்து போகவேண்டிய அரசியல் பாதை என்றும் மக்களை திசைதிருப்பிக் கொண்டு தமிழர்களாகிய நாங்கள் எங்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழ் கலாச்சார விழுமியங்களையும் சாஸ்த்திர சாட்சியங்களையும் காப்பாற்றி அதை பின் பற்றாமல் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அல்லது நாமே அறியாமல் விலகி செல்கின்றோம்.

உலகத்தில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அரசியல்  பொருளாதார கொள்கைகளுக்கேற்ப கட்சிக ளோ அல்லது தனித்துவமான கொள்கையுடைய கட்சிகளோ இருக்கும் அந்த கொள்கைகளுக்கேற்ப தேவையான கட்சியுடன் சேர்ந்து பணியாற்றும் நபர்கள் இருப்பார்கள். அதனால் இலகுவாக எங்கள் அறிவிற்கேற்ப எங்கள் கொள்கைக்கு ஏற்ப கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற முடியும். ஆனால் தமிழர்களாகிய நாங்கள் எந்த கொள்கையுடய தமிழ் கட்சியுடன் பங்காற்றினால் எங்கள் நியாயமான இலக்குகளை அடையமுடியும் அல்லது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது இப்பொழுது பெரும் சந்தேகத்துக் குரியதாகவே இருக்கின்றது.
எமது 30 வருட போராட்டத்தில் எமது மக்களால் சரியான இலக்கு கொள்கை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது தமிழீழம் என்பதாகவே இருந்தது ஆனாலும் அங்கு இரு பிரிவினர் இருந்தனர் ஒன்று தமிழீழத்தை ஆதரித்தவர்கள் மற்றது அதனை எதிர்த்தவர்கள். ஆனாலும் இலட்சியத்தை நோக்கிய பாதையும் அதற்கான கட்டமைப்புகளும் தெளிவானதாக இருந்தது. போராட்டத்தின் வன்மங்களையும் கடின சுமையையும் மக்கள் தாங்கி வாழ்ந்தாலும் இடப்பெயர்வின் போது ஏற்பட்ட நெருக்கடிகளின் போதும்! எமது தமிழ் கலாச்சார பண்பாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. சீரான உறவுகளோடு மக்கள் தங்கள் தமிழ் பண்பாடுகளையும் சமூக கட்டமைப்புகளையும் சீரழிய விடாது கெட்டியாக தாங்கி நின்றனர். அல்லது அந்தநேரத்தில் இருந்த தலைமைகளால் இவைகள் கட்டிகாப்பாற்றப்பட்டது.
ஆனால் இப்பொழுது இலங்கை அரசுடனான இணக்கப்பாட்டுடன் அரசியல் வழியிலான் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்துகொண்டிருக்கும் எமது பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எதை நோக்கி செல்கின்றார்கள் என்பதனையே அறியமுடியாமல் இருக்கின்றது.
எமக்கு வேண்டிய சுயநிர்ணய உரிமை தவிர்த்து எமக்கு இருக்கின்ற ஆகக்குறைந்த பிரச்சனைகளை கூட எமது தமிழ் பிரதிநிதிகளால் தீர்த்து வைக்க முடியவில்லை.
உதாரணமாக தமிழ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழகம்.  இன்று சிங்கள மாணவர்களும் இங்கு  வந்து கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் வடக்கு பகுதி மாணவர்கள் தங்கள் கற்கை நெறிக்காக தெற்கு நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இதை விட பல்கலைக்கழகத்தை சுற்றி சிங்கள மாணவர்கள் தங்குவதற்காக எமது மக்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கின்றனர். இப்படியாக வடபகுதியில் அதிகரித்து வரும் சிங்கள பிரசன்னங்கள்  சிங்கள குடியேற்றங்களாக மாறும் நிலைமை வெகு தொலைவில் இல்லை.
தமிழர்களின் தாயகப்பகுதிகள் எப்பொழுதும் விவசாயத்தில் தன்னிறைவு கொண்டதாகவே இருந்துவந்துள்ளது. எவ்வளவு இறுக்கமான போர்கால சூழலிலும் எமது உணவுத் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்யக்கூடிய நிலைதான் இவ்வளவு காலமும் இருந்தது. ஆனால் இன்று எமது உணவுதேவைக்குரிய மரக்கறிகளுக்கு தென்னிலங்கையை நம்பி வாழவேண்டி சூழ்நிலை உருவாகியுள்ளது. இது விவசாயிகளின் பொறுப்பின்மையாக இருந்தாலும் அவர்களை காப்பாற்றி ஊக்கமளித்து விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது வடமாகாணசபையின் பொறுப்பேயாகும். அதற்கு இலங்கை அரசை குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை.
அதைவிட வன்னி பெருநிலப்பரப்பில் பெருந்தொகையான நெல்விளையும் பூமிகள் இன்று இராணுவத்தினராலும் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்கள மக்களும் விவசாயம் செய்துவருகின்றனர்.
இப்படிப்பட்ட பல காரணங்களால் தமிழர் தாயகப்பகுதிகள் தன்னிறைவு நிலையிலிருந்து மாறி மற்றவர்களை கையேந்தும் நிலைக்கு மாறிவருகின்றது.
போருக்கு பின்னான இந்த காலப்பகுதியில் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்;. அத்தோடு இந்த நவீன உலகத்திற்கு ஏற்ப தங்களுடய வீடுகளில் தொழில்நுட்ப சாதனங்கள் மின்சாரப் பொருட்கள்  வாங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இவ்வகையான மக்களின் மனநிலையை அறிந்த இலங்கை அரசு கடனடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்வதற் கேற்ற வசதிகளை வியாபாரிகள் மூலம் செய்து கொடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தேவையான பொருட்களை கடனடிப்படையில் வாங்கி கொள்கின்றனர்.
இதனால் போரினால் ஏற்பட்ட சுமையுடன் சேர்த்து இந்த கடன் சுமையையும் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி சிந்தனைகளையும் சுயஉணர்வையும் மறந்து பொருளாதாரத்தை நோக்கி செல்லும் பொருளாதார அடிமை நிலைக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அல்லது அவர்கள் மாற வேண்டிய நிலையை திட்டமிட்டு இலங்கை அரசு உருவாக்கி கொண்டு இருக்கின்றது.
இதனால் உலகமே வியக்கும் வகையில் வீரத்துடன் போராட்டங்களை நடாத்தி நேர் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது தமிழ் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
இதனால் நாம் எதை நோக்கி செல்கின்றோம்? அல்லது நம்மை இந்த இலங்கை அரசும் தமிழ் பிரதிநிதிகளும் எங்கே அழைத்து செல்கின்றார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எமக்குள் எழுகின்றது.
இப்படியான இறுக்கமான பொருளாதார நெருக்கடிக்குள் எம்மை வைத்துக்கொண்டு  எம்மை பற்றியும் எமது சுற்றத்தை பற்றியும் நாம் இழந்ததையும்  நமக்காக உயிர் நீத்தவர்களையும்   சிந்திக்க விடாமல் வைத்திருக்கின்றார்கள். உண்மையில் எமக்கு இப்பொழுது என்ன தான் அவசியம் தேவை என்பதை கூட சிந்திக்க முடியாமல் இருக்கின்றோம்.
அதிகரிக்கும் மது பாவனை,  போதை வது பழக்கம்,  இராணுவ முகாம்கள் தோறும் வைக்கப்படும் புத்தர் சிலைகள்,  தமிழ் பகுதியில் அதிகரிக்கும் சிங்கள வர்த்தகர்களின் எண்ணிக்கை, போன்று தமிழ் சமுதாயத்தை சீரழிக்கும் நடவடிக்கைகள் பல எமது தமிழ் சமுதாயத்தில் பரவ ஆரம்பித்திருக்கின்றன. அதனை கவனமாக இனம் கண்டு சீர் செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் குடிமகனும் தமிழ் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு தமிழ் குழுக்கள் அமைப்புகள்  இயக்கங்களின்  கடமையே அன்றி  சிங்கள அரசின் கடமையல்ல.
அத்தோடு இப்படியான சமதாய சீரழிவுகள் எல்லாமே 2009 யுத்தத்திற்கு பின்னர் தான் ஏற்பட்டது தெள்ளத்தெளிவாக ஒன்றாகும். ஆகவே இதற்கான காரண காரியங்கள் யாவும் இப்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களையே சாரும். அவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்துமுரண்பாடுகளும் அதிகார போட்டிகளுமேயாகும். உலக வரலாறுகள் எமக்கு இதனை தெளிவாக அறிவுறுத்தி நிற்கின்றன. பல மக்கள் தலைவர்களின் பிழையான நடவடிக்கைகளால் அந்த நாடும் மக்களும் சீரழிந்த வரலாறுகள் எமக்கு ஏராளமான பாடங்களை சொல்லித் தந்திருக்கின்றன.
எமது அரசியல் தலைவர்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரங்களும், பதவிகளும், நிர்வாகத்தை நடாத்தும் சந்தர்ப்பமும் தமிழ் மக்களினது வாழ்க்கையை சீர்படுத்தி வளப்படுத்துவதற்கும், எமது கலாச்சார பண்பாடுகளை காப்பாற்றுவதற்கும், தமிழர் வரலாறு சொல்லும் வரலாற்று சாட்சிகள், ஆவணங்களை பாதுகாப்பதுமேயாகும். அன்றி சிங்கள அரசின் ஆசனங்களை அலங்கரித்து சிங்கள அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவோ அல்லது சிங்கள அரசின் நற்பெயரை பெறுவதற்காகவோ அல்ல.
‘கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியில் பெருமை வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்”
பாரதியார்;.
தமிழ்நேயன்
Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*