கூட்டமைப்புக்கு மாற்று உருவாகுமா? சங்கரியாரின் அழைப்பும் முதலமைச்சரின் பதிலும்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிnew-Gif1 தமிழ் அரசியலரங்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். தவறான நேரங்களில் தவறாகக் காய்களை நகர்த்துவதுதான் சங்கரியின் வழமை. இப்போதைய அவரது நகர்வுகள் அவ்வாறான ஒன்றா அல்லது, சரியான நேரத்தில் சரியான இலக்கில்அவர் காய் நகர்தியுள்ளாரா என்பதை உடனடியாகச் சொல்லமுடியவில்லை. சங்கரியாரின் இந்தக் காய்நகர்தலால் கூட்டமைப்பின் தலைமை அதிர்ந்து போயிருப்பதாகவும் தகவல்.  எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை கூட்டமைப்பின் தலைமை நுணுக்கமாக அலதானித்துக்கொண்டிருக்கின்றது.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்கினால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியையும், உதயசூரியன் சின்னத்தையும் அவரிடம் கொடுப்பதற்கு நான் தயார். அவர் சுட்டிக்காட்டும் ஒருவரிடம் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுவதற்கும் விரும்புகிறேன்” என்பதுதான் ஆனந்தசங்கரி வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் சாரம்சம். தமிழ் அரசியல் வட்டாரங்களில் ஒரு சலசலப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக மற்றொரு அணி களம் இறங்கப்போகின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கின்றது.

1976 க்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியாக மேலோங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியையும், அதன் உதயசூரியன் சின்னத்தையும் முடக்கிவைத்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்தசங்கரியின் இந்த அறிவிப்பு தமிழ் அரசியல்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சங்கரியிடமுள்ள துருப்புச் சீட்டு

ANANDASANGAREEதொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மிகவும் மோசமான தோல்விகளை ஆனந்தசங்கரி சந்தித்திருந்தாலும், இன்று அவரிடம் இருக்கும் துருப்புச் சீட்டு அந்த உதயசூரியன் சின்னம் மட்டும்தான்.  அது அவர் எதிர்பார்ப்பதைப்போல பலமான ஒரு துருப்புச் சீட்டாக இருக்குமா என்ற கேள்வியும் உள்ளது. காரணம் கடந்த காலங்களில் அதனை வைத்துக்கொண்டு அவரால் எதனையும் சாதிக்க முடியவில்லை.

தமிழ் அரசியல் பாரம்பரியமான இரண்டு பெரும் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு உதயசூரியன் சின்னமே பயன்படுத்தப்பட்டது. இரு துருவங்களாக இருந்த தந்தை செல்வாவும், ஜீ.ஜி.பொன்னம்பலமும் இணைந்து 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போது, தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை காணப்பட்டது. அந்த நம்பிக்கையையும் எழுச்சியையும் 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாரிய தேர்தல் வெற்றியாக அறுவடை செய்தது. எதிர்க்கட்சித் தலைவராக அ.அமிர்தலிங்கமும் தெரிவானார்.

ஆனால், இளைஞர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் வகையில் கூட்டணி செயற்படாத நிலையில்தான் ஆயுதப்போராட்டம் தீவிமடைந்தது. 2002 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் உருவான சமாதான சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புக்கள் அரசியலில் இறங்கியிருந்த நிலையில் அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் உதயசூரியன் சின்னமே பயன்படுத்தப்பட்டது.

வீட்டுக்கு முக்கியத்துவம்

பின்னர் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் உதயசூரியன் சங்கரியின் வசமாக, அதில் இணைந்திருந்த கட்சிகள் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டன. வீட்டுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யாமல் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதில் தமிழரசுத் தலைமை இறங்கியது. இன்னைய உள்முரண்பாடுகளுக்கு இதுதான் காரணம்.

sampanthanஇருந்தபோதிலும், கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தனியாகச் செல்வதற்கான துணிச்சல் பங்காளிக்கட்சிகளுக்கு இருக்கவில்லை. 2010 தேர்தலில் கஜேந்திரகுமார் அணியினருக்கு நிகழ்ந்ததை தமக்கான ஒரு படிப்பினையாகவே இந்தக் கட்சிகள் கருதுகின்றன.

அதனால், மக்களை வசீகரிக்கக்கூடிய – நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய பலமான ஒரு தலைமை, அதேபோன்ற இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு கட்சி கையில் இல்லாமல் களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது என இக்கட்சிகள் கருதுகின்றன. இதில் பெருமளவுக்கு உண்மை உள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள போதிலும், கூட்டமைப்பிலிருந்த போது பெற்றுக்கொண்ட ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவரால் பின்னர் பெறமுடியவில்லை.

இந்த முன்னுதாரணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடன் கூட்டுக்குடும்பம் நடத்தும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளன. தமிரசுடனான சகவாசத்தை முறித்துக்கொண்டு வெளிவருவது குறித்து தீவிரமாக ஆலோசித்தாலும், களத்தில் இறங்க முடியாதவையாகவே அவை உள்ளன.

விக்னேஸ்வரனின் பதில்  

இந்தப் பின்னணியில்தான் தமிழரசுத் தலைமையுடன் விக்னேஸ்வரனுக்கு உருவாகியிருக்கும் முரண்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள பங்காளிக் கட்சிகள் முற்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற ஒரு தலைவராக விக்னேஸ்வரன் உள்ளார். அவரைத் தலைவராக முன்னிறுத்தி அரசியல் செய்வதற்கு பங்காளிக்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவது இரகசியமானதல்ல. விக்னேஸ்வரன் தலைமையேற்றால் அவருடன் இணைந்து செயற்பட தானும் தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெரிவித்திருக்கின்றார். அதற்கும் ஒருபடி மேலே சென்று தன்னுடைய கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியை தாரைவார்த்துக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக ஆனந்தசங்கரி இப்போது அறிவித்திருக்கின்றார்.

cv.wமுதலமைச்சர் விக்னேஸ்வரன் இதற்கான தன்னுடைய பிரதிபலிப்பை உடனடியாகவே வெளியிட்டிருக்கின்றார். ஆனந்தசங்கரின் அழைப்புக்கான நேரடியான பதிலாக அது அமைந்திருக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் ஒற்றுமையாகச் செயற்படுவோம் எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்த அழைப்புக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் ஊகங்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே அவரது பதில் அமைந்திருக்கின்றது.

“முதலில் ஒற்றுமையாகச் செயற்படுவோம்” முதலமைச்சர் கோரியிருப்பதன் மூலம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை ஏற்பது, அதற்கான அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னதாக மேலும் சில படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகின்றது. அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு அவர் தயாராகவில்லை. அவருடைய அரசியல் பாணியே அதுதான்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பணி அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடமும் உள்ளது. அதனைவிட கட்சித் தலைமைப் பதவியைப் பற்றி விவாதிப்பது அவசியம் இல்லை. அதற்கான தருணம் இதுவல்ல என்பதுதான் முதலமைச்சரின் கருத்து எனத் தெரிகின்றது.

அதேவேளையில், அழைப்பை அவர் ஒரேயடியாக நிராகரித்துவிடவும் இல்லை. முதலமைச்சரின் பதிலில் முக்கியமான செய்திகள் உள்ளன. தமிழ்க் கட்சிகள் (கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏயை கட்சிகள்) அதனை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றன என்பதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கும். பந்து இப்போது தமிழ்க் கட்சிகளின் பக்கம்.

– டேவிட்ட ராமன்.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*