கார்த்திகை நினைவேந்தலும் புலம்பெயர் தேசங்களும்

சுதந்திர வேட்கையையும் மூர்க்கமான அர்ப்பணிப்பையும் தமிழ்த் தேசிய விடுதலைக்கானnew-Gif1 போராட்டங்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அவை, விலை மதிக்க முடியாத தியாகங்களினால் நிறைந்தவை.

‘இலக்கு எது’ என்பது தொடர்பில் பல நேரங்களில் மாற்றங்களை செய்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக் களம், ஒரு கட்டத்தில் தனி ஈழம் எனும் இலக்கை இறுதி செய்து, அதற்கான அர்ப்பணிப்பை அபரிமிதமாக வழங்கியிருக்கின்றது.  அதிகமான உயிர், உடல், வாழ்க்கை இழப்புகள் அதற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றன. கார்த்திகை நினைவேந்தல் வாரத்தில் இந்த விடயங்களை நினைவிலேற்றி பயணத்தை தொடர வேண்டிய கடப்பாடோடு தமிழ்ச் சமூகம் இருக்கின்றது.

போராட்டத்தின் மீதான பற்றுறுதியையும், சந்தர்ப்பங்களை தீர்க்கமாக கையாளும் திறனையும், நிலைத்திருப்பதற்கான போக்கினையும் சரியாக உள்வாங்கி, அரசியலாக வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. முடித்து வைக்கப்பட்ட போராட்ட வடிவங்களின் வெற்றி- தோல்வி குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து கொள்வது அவசியம். அது, தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதாக அமையாது. மாறாக, அந்த தியாகங்களை அர்த்தப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரும் வழிமுறைகள் அவை. அதை தமிழ்ச் சமூகம் கடந்த காலங்களில் செய்திருக்கவில்லை.

ஓர் இனம், தன்னுடைய உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.  பழம்பெருமைகளைப் பேசுதல் என்பது பல நேரங்களில் மனகிலேசங்களை மாத்திரமே கொடுக்கும். மாறாக, பயன்களை வழங்காது. தமிழ்ச் சமூகம் குறியீட்டு ஒருங்கிணைவையும், பழம்பெருமை பேசுதலையும் ஒன்றாக்கி தொடர்ந்தும் குழப்பிக் கொண்டு வந்திருக்கின்றது. மே மாதத்தையும், நவம்பர் (கார்த்திகை) மாதத்தையும் விடுதலைப் போராட்டங்களுக்காக நிகழ்த்தப்பட்ட தியாகங்களை நினைவிலேற்றி ஒருமிப்பதற்கான வழிகளாகக் கொள்ள வேண்டும். அது, குறியீட்டு அரசியல் வடிவங்களில் ஒன்று.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தலைமை வழங்கிய கால்நூற்றாண்டு காலத்துக்குப் பின்னரான கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியல் – சமூக அபிவிருத்தி ஆகியவற்றில் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றிகள் எவையும் சாத்தியமாகவில்லை. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து, தமது எதிர்பார்ப்பையும் அரசியல் இருப்பு தொடர்பிலான ஆணையையும் வழங்கிய சம்பவங்கள் தேர்தல்களினூடு நிகழ்ந்திருக்கின்றன. மற்றப்படி, தீர்க்கமான நகர்வுகள் என்று எவையும் நிகழ்த்தப்படவில்லை. அதற்கான வழிகள் திறக்கப்படவும் இல்லை. திறப்பதற்கான ஆர்ப்பரிப்புக்களை வெளிப்படுத்தும் தரப்புக்கள் என்று தம்மை முன்னிறுத்துபவர்கள் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவை) கூட அதற்கான சாத்தியமான வழிகளையோ, அணுகுமுறையையோ, மக்கள் நம்பிக்கை கொள்ளும்படியான செயற்பாட்டினையோ வெளிப்படுத்தியிருக்கவில்லை. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான இடத்தைக் குறைநிரப்பும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) தரப்பொன்று  ஈடுசெய்துள்ளது.

ஏன், தமிழ்த் தேசிய விடுதலைக்கான களமும், அதன் அரசியலும் தேங்கியிருக்கின்றது என்கிற கேள்வி கடந்த ஆறு ஆண்டுகளாக எம்மிடையே எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்றால், பெரும்பாலும் ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்கும். பொது எதிரிகள் (பௌத்த சிங்கள பேரினவாதம், பிராந்திய வல்லரசு, சர்வதேச வல்லரசு) பற்றி நாம் எவ்வளவு அவதானமாக இருக்க வேண்டுமோ, அதேயளவுக்கு எம்மிடையே காணப்படுகின்ற குறைபாடுகள், செயலற்ற தன்மை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருக்கின்ற தமிழ் மக்களுக்கிடையிலான ஒருங்கிணைவு என்பது, உணர்வு ரீதியில் ஒன்றாக இருக்கின்ற போதிலும், அணுகுமுறை மற்றும் தேவைகளின் போக்கில் வேற்றுமைகளினால் நிறைந்திருக்கின்றன. அது, பெரும் இடைவெளியை வெளித்தெரியாமல் உருவாக்கி விட்டிருக்கின்றது.

தனி மனிதர்களாக ஒவ்வொருவரினதும் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் என்பன அவர்களின் தளங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சமூகமாக ஒருங்கிணையும் போது அந்தத் தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் சில விட்டுக்கொடுப்புக்களோடும், அணுகுமுறை சார்ந்தும் பிரதான தேவைகள், எதிர்பார்ப்புக்களை இலக்குக்களாக மாற்றுகின்றன. இலக்குக்கள் என்பவை, சில நேரங்களின் தனி மனிதர்களாக சிலருக்கு அவசியமற்றவையாகக் கூட இருக்கலாம். சமூகமாக ஒருங்கிணையும் போது அவற்றை இலக்காக ஏற்றாக வேண்டும். அதுதான், சமூக அரசியலின் சூட்சுமம். தாயகத்திலிருக்கின்றவர்களுக்கும் புலம்பெயர் தேசங்களிலிருக்கின்றவர்களுக்கும் இடையிலான வெளித்தெரியாக வேறுபாடுகளும் இப்படித்தான் உருவாகியிருக்கின்றன.News-GIF-maveetar2015

12003858_1708295689384722_8527438948118134157_nபுலம்பெயர் தேசத்திலிருக்கின்ற தாயகத்தின் நேரடித் தலைமுறை தன்னுடைய இறுதிக் காலங்களை நோக்கி நகர்கின்றது. அடுத்த தலைமுறையே அதன் அரசியலையும், சமூக அபிவிருத்தியையும் தீர்மானிக்கும் தரப்பாக இருக்கின்றது. அப்படியான நிலையில், தாயகத்துக்கும், புலம்பெயர் தேசத்திலிருக்கின்ற புதிய தலைமுறைக்குமான (பெரும்பாலும் அந்த நாடுகளில் பிறந்து, வளர்ந்த) தொடர்பாடலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பெரிதாக ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய ஆர்வத்தோடு தாயகத்திலும்- புலம்பெயர் தேசத்திலும் இயக்கும் நண்பரொருவருடனான அண்மைய உரையாடலொன்றில் அவர், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், கார்த்திகை நினைவேந்தல் (மாவீரர் தினம்) என்பன எவ்வளவு உணர்வுபூர்வமாக, குறிப்பிட்டளவான புலம்பெயர் மக்களினால் அணுகப்படுகின்றதோ, அதேயளவுக்கு, அவற்றை எந்தவித அடிப்படைகளும் இன்றி களியாட்ட மனநிலையோடு அணுகும் தலைமுறையொன்றும் உருவாகி விட்டிருக்கின்றது. அத்தோடு, பணத்தைப்; பறிக்கும் கும்பல்களின் தொடர்ச்சியும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளது.’ என்றார்.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான களங்களை களியாட்ட மனநிலையோடும், பணம் பறிக்கும் வாய்ப்பாகவும் அணுகும் தரப்புக்களை இனங்கண்டு, புறந்தள்ள வேண்டியதன் அவசியத்தை புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், தாயகம்- புலம்பெயர் தேசத்துக்கிடையில் காணப்படும் இடைவெளியின் பெரும் இடத்தினை ஏற்படுத்தி விட்டவர்களில் இந்த இரண்டு தரப்புக்களும் முக்கியமானவை. தமிழ்த் தேசிய விடுதலையை பணம் பறிக்கும் – வசூலிக்கும் சூட்சுமமாக கருதும் தரப்புக்களே, அதீத உணர்வூட்டல்களை எந்த நியாயப்பாடுகள் இன்றி செய்து கொண்டும், துரோகி பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்தத் தரப்புக்களுக்குள் இருக்கின்றவர்களில் பலர், விடுதலைப் புலிகளின்  பில்லியன் கணக்கான சொத்துக்களை சொந்தமாக்கி விட்டு சூழ்ச்சி அரசியல் செய்கின்றார்கள். ‘தலைவர் வரட்டும் அவரிடம் சொத்துக்களை வழங்குவோம்’ என்கிற சல்ஜாப்பு கோஷ்டிகளே, புலம்பெயர் தேசங்களின் தமிழ்த் தேசிய அரசியலை பெரும்பாலும் தீர்மானிக்கின்றன என்பது மிகவும் வருத்தமான ஒன்று. தமிழ்த் தேசிய அரசியலில் ‘முடிவு’களை எடுக்கின்றவர்களாக தம்மை பெரும்பாலும் முன்னிறுத்த முனையும் தரப்புக்கள் அல்லது அதன் கடிவாளத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் தரப்புக்களுக்கிடையிலான மோதல் என்பதுவும் பிராந்திய ரீதியில் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

தாயகத்திலிருக்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகள், தமிழ்ச் சமூகம் பாடிக் கொண்டிருக்கும் பெருமைகளை ஓங்கி அறையும் அளவுக்கு இருக்கின்றது. அதுவும், ஆயுத  மோதல்களின் வடுக்களை மனங்களிலும், உடலிலும், தேசத்திலும் வாங்கியிருக்கின்றவர்களின் தேவைகள் பாரதூரமானவை. அவற்றை பூர்த்தி செய்யாமல், கொள்கை கோட்பாடுகள் என்று பேசிக் கொண்டிருப்பது எல்லாவற்றையும் குழிதோண்டி புதைப்பதற்கு சமமானது. இந்த உணர்திறன் என்பது தாயகம்- புலம்பெயர் தேசங்கள் என்ற வேறுபாடுகள் இன்றி உள்வாங்கப்பட வேண்டும். அது, அடுத்த கட்டம் நோக்கிய நம்பிக்கைகளோடு அணுகப்படவும் வேண்டும்.

மாவீரர் தினத்தை முன்னிறுத்தி, புலம்பெயர் தேசங்களில் இன்னமும் நிதி சேகரிக்கப்படுகின்றது. இந்த நிதி எங்கு செல்கின்றது. யார் யார் கையாள்கின்றார்கள் என்கிற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும், ஏனெனில், கடும் உடலுழைப்பை வழங்கி சம்பாதிக்கப்படும் பணம், ஊழையாக யார் யாரிடமோ சென்று சேர்கின்றது. அதற்காக, தியாகங்களையும், உணர்வுகளையும் விற்பனையாக்கும் தரப்பு திட்டமிட்டு செயலாற்றுகின்றது. புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் அஞ்சலி செலுத்துவற்கும், ஒருங்கிணைவதற்குமான புள்ளிகளாக எவ்வாறு அமைய முடியுமோ, அதேயளவுக்கு தாயகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கவும், தீர்க்கமான அரசியலை முன்னெடுக்கவும் உதவ வேண்டும்.

ஒவ்வொரு விடயத்தையும் முன்னிறுத்தி நிறையக் கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். தாயகத்திலிருக்கின்றவர்களோடு நேரடியாக உரையாட வேண்டும். இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் மட்டுமே அரசியலையும், உறவின் தொடர்ச்சியையும் இறுதி செய்ய முடியாது. ஏனெனில், அவற்றின் உண்மைத்தன்மை அபத்தமானவை. அவற்றை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டு, சிறிய ஜனநாயக வெளியொன்று திறக்கப்பட்டுள்ள போதிலும், மாவீரர்களை வெளிப்படையாக நினைவுகூருவதற்கான அனுமதியை அரசாங்கம் மனதார தரும் என்று கொள்ள முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளே கூட பாரிய இடர்பாடுகளைத் தாண்டியே நடந்திருக்கின்றன. அப்படியான நிலையில், புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அர்ப்பணித்தவர்களை அர்த்தபூர்வமாக நினைவிலேற்றி நினைவுகூரப்படும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். அது, தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்களின் குறியீட்டு அரசியலும் ஆகும்.

நீண்டு கோலோச்சிய ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசிய விடுதலைக் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், தீர்க்கமான போராட்ட வடிவத்தினை சூழ்ச்சிகளை முறியடித்து தமிழ்ச் சமூகம் தேர்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், கார்த்திகை நினைவேந்தல் வாரம் நினைவூட்டிச் செல்கின்றது.

http://ekuruvi.com/wp-content/uploads/2015/11/article_1448427809-prujoth.jpgGif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*