தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது : சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ்மக்களின் new-Gif1நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன என சென்னையில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அராசங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விடயத்தில் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் இத் தீர்மானம் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 தமிழகத்தின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையார் ஒருங்கிணைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒக்ரோபர் 14ம் நாளன்று (14.10.2015)  ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்னைவழியாக பங்கெடுத்திருந்த இவ் ஊடகவியலாளர்களர் மாநாட்டில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவஹருல்லா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் கரு.அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவாளர் தோழர் முனைவர் விஜய் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் தோழர் வன்னிஅரசு (மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), ஊடகவியலாளர் வுளுளு.மணி, ஓவியர் புகழேந்தி மற்றும் பலர் கலந்துகொண்டிருநதனர்.
நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கயிருந்த உரையின் முழுவடிவம் :
அன்புத் தோழர்களே
இங்கு கூடியிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் மாவீர்களையும், முத்துக்குமார் முதற் கொண்டு தமிழீழக் கனவை நெஞ்சிலே சுமந்து தமது உயிர்களைத் தமிழக மண்ணிலே ஆகுதியாக்கிய அனைத்து ஈகிகளையும் மனதிலிருத்தி எனது வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமானதொரு காலகட்டத்தில் நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இம் மாதம் முதலாம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு நியாயம் வழங்கக்கூடிய வகையில் இத் தீர்மானம் அமையவில்லை. இது மிகவும் கவலை தரும் விடயமாக இருப்பினும் ஆச்சரியத்துக்குரியதொன்றாக இருக்கவில்லை.

சிறிலங்கா அரசிடம் யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழின அழிப்பு போன்ற விடயங்களில் அனைத்துலக தராதரத்துக்கு அமைய விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதனையும், குற்றம் இழைத்த ஒரு தரப்பாக சிறிலங்கா அரசே இருப்பதனால் நீதி விசாரணைகளைச் செய்வதற்கான தகைமையும் அதற்குக் கிடையாது என்பதனையும் நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம்.
இதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணை அவசியம் என்பதனை இன்றும் வலியுறுத்தி வருகிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் அரசியற் காரணங்களுக்காகவே அனைத்துலக விசாரணை பரிந்துரை செய்யப்படவில்லை. எனினும் நாம் சுட்டிக் காட்டியபடி சிறிலங்கா அரசுக்கு இக் குற்றவியல் விசாரணைகளைச் செய்வதற்கு அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.  இந் நிலையில் அமெரிக்கா முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேறிய இத் தீர்மானம் இவ் விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசே முடிவுகளை எடுக்கும் நிலையினைத் தோற்றுவிக்கிறது. இதனால் இவ் விசாரணைப் பொறிமுறையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றே நாம் கருதுகிறோம்.
இதனால் இத் தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மாட்டாத ஒரு தீர்மானத்தைத் தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதேவேளை இத் தீர்மானம் தமிழ் மக்களின் விருப்பத்தை மீறிய வகையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய பலம் தற்போது தமிழ் மக்களிடம் இல்லை. இதற்காக நாம் இந்தத் தீர்மானத்துக்கு சம்மதம் கொடுக்க முடியாது. தமிழ் மக்களின் விருப்புக்கு மாறான வகையிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பதனை நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.
இதேவேளை எமது சக்;தியை மீறித் தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக நாம் வெறுமனே வார்த்தைகளில் எதிரப்பைக் காட்டிக் கொண்டிருப்பதனால் பயன் ஏதும் வரப்போவதில்லை. சிறிலங்கா அரசுக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் அரசியல் விருப்பும் தகைமையும் கிடையாது என்பதனை இப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை உன்னிப்பாகக் கண்காணித்து ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வெளிப்படுத்தி அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவை என்பதனை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
இதற்காக சட்ட, அரசியல் நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்றினை அமைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இக் குழுவில் இடம்பெறுவோர் பெயர் விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம். இவர்கள் சிறிலங்கா அரசின் விசாரணைப்பொறிமுறையைக் கண்காணித்து சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பணியைச் செய்வார்கள். இக் குழுவின் செயற்;பாடுகள் அனைத்துலக விசாரணை என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியற் கட்சிகளும் அமைப்புகளும் அனைத்துலக நீதி விசாரணை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது கண்டு நாம் மிக மனநிறைவடைகிறோம். இது தொடர்பாக தமிழ் நாடு சட்ட மன்றப் பேரவையில் நிiவேற்றப்பட்ட தீர்மானமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ் விடயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளும் ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளும் ஒன்றித்தே இருக்கின்றன. புலம் பெயர் ஈழத் தமிழ் மக்கள் மட்;டுமல்ல தாயகத்தில் வாழும் ஈழத் தமிம் மக்களும் உள்ளுர் விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். அவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையையே கோரி நிற்கின்றனர்.
தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் அதனை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட 1 மில்லியன் கையெழுத்தியக்கத்தில் எந்தவித பரப்புரையும் இன்றி ஒரு இலட்சம் வரையிலான மக்கள் ஈழத்திலிருந்து பங்கு பற்றியிருக்கின்றனர். அண்மையில் ஈழத்தாயகத்தில் குறுகிய காலத்தில் நடாத்தப்பட்ட கையெழுத்தியக்கத்தில் அனைத்துலக குற்றவியல் நீதி விசாரணையே தேவையெனக் கோரி 2 இலட்சம் வரையிலான மக்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.
இவையெல்லாம் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக உள்ளன. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகளில் அனைத்துலக குற்றவியல் விசாரணையினை வலியுறுத்தியது. தற்போது கூட்டமைப்புத் தலைமை தீர்மானத்தை ஆதரிப்பதனை அவர்களும் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் என்ற அனைத்துலகத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கிறார்கள் என்ற பின்னணியில் இருந்துதான் நோக்க வேண்டும். மக்களின் விருப்பினைத் தாண்டி ஓர் அரசியற் தலைமை அதிக தூரம் பயணிக்க முடியாது. இதனால் இவ் விடயம் காரணமாக நாம் இப்போது அதிகம் கவலையடையத் தேவையில்லை.
சிறிலங்கா அரசுதான் முதன்மைக் குற்றவாளி!
தமிழ் மக்களுக்கெதிரான இனஅழிப்பில் முதன்மைக் குற்றவாளியே சிறிலங்கா அரசுதான். சிறிலங்கா அரசின் கொள்கைகளில் ஒன்றாகத்;தான் தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களைச் சிதைப்பதும், ஈழத் தமிழினம் ஒரு தேசம் என்ற தகைநிலையை இல்லாதொழிப்பதும், சிறிலங்கர் என்ற அடையாளத்துக்குள் தமிழ் மக்களைத் திணிப்பதும் இருக்கின்றன. இத் திட்டத்தின் ஒரு கொடூரமான வடிவம்தான் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பதை நாம் நன்கறிவோம். சிறிலங்காவின் இந்த இனஅழிப்புத் திட்டத்தினை உயிர்களைக் கொல்லும் பரிமாணத்துடன் மட்டும் நாம் நோக்கக்கூடாது. சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவரும் இனஅழிப்பினை நாம் போர்க்குற்றமாக மட்டும் குறுக்க முடியாது.
இத்தகையதொரு பின்னணியில் நாம் ஓர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையின் ஊடாக நீதியினைக் கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.
1. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி என்பது இவ் இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையிலான பரிகார நீதியின் பாற்பட்டதோர் அரசியல் ஏற்பாடாகவே இருக்க முடியும். இத்தகைய அரசியல் ஏற்பாட்டினை நாம் எட்டிக் கொள்வதற்கு உறுதுணை செய்யும் வழிமுறையாகத்தான் தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக விசாரணைப்பொறிமுறை அமைய முடியும்.
2. இவ்விடயத்தில் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக ஒரு விசாரணைப்பொறிமுறையை அமைப்பதற்கான அரசியல் விருப்போ அல்லது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலைநிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது. அனைத்துலக நிபுணர்கள் எவரும் அந்நாட்டு அரசியற்சூழலைத் தாண்டிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது.
இத்தகைய காரணங்களுக்காக நாம் அனைத்துலக விசாரணைப்பொறிமுறையைக் கோரிவந்த வேளையில் சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குப் பதிலாக உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரிக்கும் போக்கு அனைத்துலக அரசுகளிடம் வளர்ச்சியடையலாம் என்பதனை நாம் உய்த்துணர்ந்து கொண்டோம்.
இதனால் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் அனைத்துலக அரங்கில் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் அபாயமும் உணரப்பட்டது. இந்தச் சவாலை அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் எதிர்கொள்ள சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குள் நிறுத்துமாறு கோரி நாம் 1 மில்லியன் கையெழுத்தியக்கத்தை ஆரம்பித்திருந்தோம். News-GIF-maveetar2015
இக் கையெழுத்தியக்கத்தில் இணைந்திருந்த  1.4 மில்லியன் கையெழுத்துக்களை நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளித்திருக்கிறோம்.; இக் கையெழுத்தியக்கத்தில் நீதிக்காகக் குரல் கொடுக்கக் கூடிய அனைத்துலக சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது உற்சாகம் தருவதாக உள்ளது.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்ட யுத்த மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழன அழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது குறித்து இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செம்டம்பர் மாதம் 17 ஆம் திகதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் வரவேற்கிறது. இதேபோல, அனைத்துலக விசாரணைப்பொறிமுறை தேவையென வடக்குமாகாணசபை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களால் 01.09.2015 அன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமும் மிகவும் முக்கியமானது. இவை மக்கள் எழுச்சிக்கு வலுவூட்டக் கூடியவை. உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை. தமிழ் மக்களின் எழுச்சி மிக்க போராட்டத்துடன் உலகில் நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக அமைப்புக்களையும் மக்களையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நலன்களின் அச்சில் சுழலும் அனைத்துலக உலக ஒழுங்கில் சிறிலங்கா அரசுடன் நல்ல உறவுகளைப் பேணுவதன் மூலம் தாம் விரும்புவதைச் சாதிக்க முடியுமென மரபுவழிச் சிந்தனை கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடரந்தும் நம்பிச் செயற்பட்டு வருகிறார்கள். இந்த மரபுவழிச் சிந்தனை காணமாகவுமே கடந்த இந்திய அரசாங்கக் காலத்தில் தமிழின அழிப்புக்கு இந்தியாவும் துணைநின்றது என்ற அவப்பெயர் இந்திய நாட்டுக்கு கிடைத்தது.
இந்திய நலன் குறித்து தொலைநோக்குப் பார்வையில் நோக்கின் இந்திய மத்திய அரசு சிறிலங்கா அரசின் பக்கம் நிற்காமல் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதுதான் சாதகமானது என்பதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான்  அனைத்துலக விசாரணை விடயத்திலும், தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்களிலும் இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முன்வரும். இத்தகைய கருத்து மாற்றத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தமிழகம் முன்னின்று கையிலெடுக்க வேண்டும்.
தமிழ்மக்களின் நீதிக்கான இப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நாம் உலகெங்கும ஒரு இலட்சம் மரங்கள் நாட்டும் இயக்கத்தை ஆரம்பித்;திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும்,  சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் இவ் இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம் மரநடுகை இயக்கம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுதினமாகிய 2016 மே 18 அன்று நிறைவுறும்.
சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின்போது கொன்றொழிக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதியை வழங்குங்கள் என்று அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் உலகப் பொது நன்மையின் பாற்பட்டு இயற்கையைப் பேணவும் இம் மரநடுகை இயக்கம் துணை செய்யுமென நாம் உறுதியாக நம்புகிறோம்.
அன்பு நண்பர்களே,
நாம் தொடரவேண்டிய இப் போராட்டத்தில்; நீதி எனும் வலுவான ஆயுதம் எமது கைகளில் உண்டு. உங்களது அரசியல் நலனுக்காக நீதியைப் பலியிடப் போகிறீர்களா என்பதை அரசுகளிடம் நாம் உரத்துக் கேட்போம். தமிழ் மக்களின் நீதிக்கான குரல்கள்; மனித உலகின்; மனச்சாட்சியை உரத்துத் தட்டி எழுப்பட்டும்.
எனது ஆரம்ப உரையினை நான் இவ் இடத்தில் நிறுத்தி விட்டு கேள்வி நேரத்துக்குள் நுழைய விரும்புகிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் கேள்விகளையும் செவிமடுத்து உரையாட விரும்புகிறேன்.
நன்றி
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
வி.உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*