உள்நாட்டு விசாரணைக்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவை:கேணல் ஹரிகரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு new-Gif1விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லி அரசியல் வட்டாரத்திற்கு அந்நியமானவரோ அல்லது இந்திய அரசாங்கத்தின் மத்தியில் பரீச்சயமற்ற ஒருவரோ அல்லர். எனினும், கடந்த ஒராண்டாக, ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசியலில் வரவேற்கப்படுகின்ற ஒருவராகக் காணப்படுகிறார்.

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் அரசியலில் பெற்றுக் கொண்ட வெற்றிகளை விட இவர் சந்தித்த தோல்விகளே அதிகம். ஆனாலும் இவர் வெற்றிகரமாக தனது நாட்டில் இடம்பெறவிருந்த அரசியல் சதியை முறியடித்திருந்தார். இதனால் இவர் தற்போது பெரிதும் வரவேற்கப்படுகின்ற ஒரு அரசியற் தலைவராக இடம்பிடித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு தடவைக்கும் மேலும் அதிபராக இருக்க முடியும் என்கின்ற அரசியல் சீர்திருத்தத்தை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவைச் சாரும்.

கடந்த ஜனவரியில் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச ஏழு மாதங்களின் பின்னர் தனது விசுவாசிகளின் உதவியுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதன் மூலம் மீண்டும் சிறிலங்காவின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மகிந்த முனைந்தார். ஆனாலும் இந்த முயற்சியையும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மிகவும் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இதன் பெறுபேறாக, கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இரண்டு தடவைகள் சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். பல்வேறு அரசியற் தடைகள் இருப்பினும், விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் விதமாக சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். நிறைவேற்று அதிபர் கொண்டிருந்த சில அதிகாரங்கள் தற்போது நாடாளுமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை, பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் மோசடி நிறைந்த நிர்வாகம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை உட்பட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சியால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் நல்லாட்சியானது தற்போது சிறிசேன-விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களாலும் மீளவும் நிலைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விக்கிரமசிங்க சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகின்றார். 1977 இன் பின்னர் தற்போது முதன் முறையாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் அமைதி போன்ற சூழலில் அபிவிருத்தியை முன்னுரிமைப்படுத்தி தேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் நாட்டில் பிரபலம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச அமைதியை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளார். போருக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால அமைதிச் சூழலில் தனக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதிலேயே மகிந்த ராஜபக்ச குறியாக இருந்தார்.

இதன் பெறுபேறாக, சிறிலங்காவின் சமூக-அரசியல் சூழலானது கசப்புணர்வு, விரோதப்போக்கு, அவநம்பிக்கை மற்றும் இன-மத எதிர்ப்புக்கள் மற்றும் கலவரங்களால் நாசமாக்கப்பட்டது.

சிறிலங்காவின் அரசியல் சூழலில் பரவலாக ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றிருப்பினும், அரசியல் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் ஒன்றை வரையறுப்பதற்கான வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. ஆனால் சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தற்போது புதுடில்லிக்கான தனது சுற்றுப்பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளமையானது முன்னரை விட இவருக்கு மிக அதிகளவான நம்பிக்கையை வழங்கியுள்ளது.

சிறிலங்கா மற்றும் இந்தியத் தலைவர்களுக்கிடையில் முன்னரைவிடத் தற்போது அதிகளவு தொடர்பாடல்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது நாட்டின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலானது சீனா நோக்கிய சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.

ஆகவே சில மாதங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் அதன்மூலம் சிறிலங்காவுடன் விரிவான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி வரவேற்றதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விரிசல்களை சீர்செய்வதற்கான மோடியின் விருப்பத்திற்கு விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது. ஆகவே சிறிலங்காவின் பிரதமர் புதுடில்லிக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளமையானது இந்திய அரசியல் வட்டாரத்தால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஏனெனில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை விடத் தற்போதுள்ள சிறிலங்கா அரசாங்கமானது புதுடில்லியின் நம்பிக்கையை அதிகம் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பச் செயற்படுவதற்கு விக்கிரமசிங்க மற்றும் சிறிசேன ஆகியோர் தயாராக உள்ளனர். இது சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் துணைபுரியும்.

ராஜபக்சவின் அரசாங்கத்தால் போரின் போதும் அதன்பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா மற்றும் மேற்குலகம் அழுத்தம் கொடுத்தபோது, அதனை முறியடிப்பதற்காக ராஜபக்ச பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டார். இது இந்தியா மற்றும் மேற்குலகை எரிச்சலடையச் செய்தது.

ராஜபக்ச தனது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக, சிங்களத் தேசியவாதம் மற்றும் சீனாவின் தலையீட்டைப் பெரிதும் வரவேற்றார். இதேபோன்று, தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் கலந்துரையாடல்களை மகிந்த ராஜபக்ச புறந்தள்ளினார். தமிழ் மக்களின் நீண்டகால அரசியற் கோரிக்கைகளைப் பரசீலிக்காது அதனை மகிந்த ராஜபக்ச தட்டிக்கழித்தார்.

இது இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் அதிகம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தமாக இருந்தது. சிறிலங்காவுடன் வெற்றிகரமான நட்புறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்த போதும் சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தமையானது இதன் உள்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்பலவீனத்தை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவிற்குள் நுழைந்து கொண்டது.

இந்தியாவின் கூட்டணி ஆட்சி முடிவடைந்துள்ள போதிலும், சிறிலங்காவில் நிலவும் இனமுரண்பாடுகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லது இதன் தேசிய பாதுகாப்பு நலனிலும் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே.

புவியியல் ரீதியாக இந்தியாவும் சிறிலங்காவும் மிகவும் நெருக்கமானவை. ஆகவே இவற்றின் தேசிய பாதுகாப்பு நலன்கள் மிகவும் பாராட்டத்தக்கவையாகும். இதுவே இவர்கள் தமக்கிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது இந்தியாவால் ஆதரவளிக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்திற்கு ஏற்ப தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் இத்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளிடம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கையளிப்பதானது சிறிலங்காவின் அரசியலைப் பொறுத்தளவில் மிகவும் கடினமான ஒன்றாகும்.

இந்தியா மற்றும் மேற்குலகைப் பொறுத்தளவில் ராஜபக்ச சீனாவைத் தனது நாட்டிற்குள் வரவேற்றமையானது இவற்றின் கேந்திர மூலோபாய அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது. குறிப்பாக ராஜபக்சவின் ஆதரவுடன் இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சித்தமையானது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு சவாலாக எழுந்தன.

இந்திய மாக்கடலின் ஊடாக சீனா தனது கடல்சார் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. அத்துடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்படைத் தளத்தை நிறுவியதானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்துள்ளது.

இதற்கு ராஜபக்சவே காரணம் என்பதால் சிறிலங்காவுடனான இந்திய உறவு கடந்த சில ஆண்டுகளாக விரிவடைந்திருந்தது. தற்போது சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவர்கள் சீனாவை விட இந்தியாவுடனேயே உறவை நீட்டித்துக் கொள்ள முனைகின்றனர்.

சிறிலங்காவைப் பொறுத்தளவில் சில விவகாரங்களில் இந்தியாவின் உதவியும் அதன் புரிந்துணர்வும் மிகவும் அவசியமானதாகும். சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் வெள்ளியன்று இறுதி வடிவாக்கப்படவுள்ளது.

ஆகவே சிறிலங்கா மீதான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையகம் வெளியிடப்பட்ட பின்னர் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இதற்கு இந்தியாவின் உதவியும் புரிந்துணர்வும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.

அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. ஆகவே சிறிலங்கா இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்காவின் நகர்வானது தமிழ்நாடு, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள போதிலும் அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது. இந்தவகையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவும் ஆதரவளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்தியா – சிறிலங்கா வர்த்தக உறவு இரண்டாவது விவகாரமாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, முழுமையான பொருளாதார உடனப்பாட்டில் கைச்சாத்திடுவதற்கான கருத்தை முன்வைத்திருந்தார். இந்த உடன்பாடானது 2008ல் ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட முற்பட்ட போது சிறிலங்காவின் உள்நாட்டு வர்த்தகர்களின் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது.

தற்போது சிறிலங்கா பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. சீனாவின் கடன்களை சிறிலங்கா ஈடுகட்டுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் தனது பக்க ஆதரவை வழங்குவதில் பெரிதளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ள சிறிலங்காவானது இந்தியாவின் கைகளை இறுகப்பற்ற வேண்டிய தேவையுள்ளது.

எனினும், வெளிப்படையாக இந்தியாவின் முழுமையான பொருளாதார உடன்பாட்டிற்கு ஆதரவளிப்பதென்பது சிறிலங்காவின் அரசியலில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிறிலங்காப் பிரதமர் முழுமையான பொருளாதார உடன்பாடு தொடர்பாக முன்னுரிமைப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹார்சா டீ சில்வா தெரிவித்திருந்தார்.

எதுஎவ்வாறிருப்பினும், இது போன்ற உடன்படிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆனாலும் கண்மூடித்தனமாக இவ்வாறான உடன்படிக்கைகளைச் செயற்படுத்தத் தொடங்கக்கூடாது எனவும் இதனை முழுமையாக ஆராய்ந்து கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான பொருளாதார உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வேண்டிய தேவையுள்ளதாக ஹார்சா டீ சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவுக்கு நலன் பயக்கக்கூடிய இருதரப்பு அல்லது பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கான உந்துதல் அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதி வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*