இந்தியாவின் உதவியுடன் அமரிக்காவினால் கொடுக்கப்படும் ஓர் ஆறுதல்பரிசே உள்ளக விசாரணை – ச.வி. கிருபாகரன்

சீனாவை ஸ்ரீலங்காவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்திற்கும் இந்தியாவின்new-Gif1உதவியுடன் அமரிக்காவினால் கொடுக்கப்படும் ஓர் ஆறுதல் பரிசே  உள்ளக விசாரணை என அரசியல் ஆய்வாளரும் மனித உரிமை  ஆர்வலரும் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளருமான ச.வி. கிருபாகரன் தமிழ்த்தந்திக்கு வழங்கிய மின்னஞ்சல் மூலமான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு கிழக்கு தமிழ்த்தலைமைத்துவங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் பெறுமதியற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தேசிய அரசு என்ற போர்வையில் முழுச்சிங்களத் தலைமைகளும் ஒன்றிணைந்து நிற்கும் இவ்வேளையில் இவர்களால் என்ன செய்ய முடியும்? என்றும் அவர் தனது நேர்காணலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

உள்ளக விசாரணையைத் தென்னிலங்கை சக்திகள் ஏற்கப்போவதில்லை. அதற்கெதிராகஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் உள்ளக விசாரணையைத் தாம்ஏற்கவில்லையென அறிவித்துவிட்டு ஒதுங்கி நின்று, தென்னிலங்கையில் அதற்கெதிராக நடைபெறும் நிகழ்வில் சர்வதேசத்திற்கு அறியப்படுத்தினாலே தமிழ்;த்தலைமைத்துவங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அவர் தமிழ்த்தந்திக்கு வழங்கிய மின்னஞ்சல்மூல நேர்காணலின் முழுவிபரம் வருமாறு:

 

நேர்காணல்: வீ.ரீ.ராஜ்

 

கேள்வி: ஜெனிவாவில் என்ன நடைபெறும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

 

பதில் : (அறிக்கை இன்றுவரை வெளிவரவில்லை! ஐ.நா.வை, விசேடமாக மனித உரிமை சபையை பொறுத்தவரையில் இவ் விடயம் மிகவும் அசாதரணமானது. காரணம் ஓர் நாடு பற்றிய அறிக்கை சபை ஆரம்பமாவதற்கு குறைந்தது இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாவதே வழக்கம். இதிலிருந்து ஸ்ரீலங்கா மீதான அறிக்கை மிகவும் கனாதியானது என்பது தெளிவாகிறது)

 

கேள்வி: இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறும்வரை சர்வதேச விசாரணை குறித்து தமிழ் அரசியல்வாதிகளால் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அமெரிக்கா உள்ளக விசாரணை குறித்த நகர்வை அறிவித்துள்ளதே?

 

பதில்: நீங்கள் கூறியது போல், உலகத்தின் வல்லரசான அமெரிக்கா இலங்கைதீவில் தேர்தல் முடிந்தவுடன் உள்ளக விசாரணை குறித்த நகர்வை அறிவித்துள்ளது. இது பற்றிய முழு விபரங்களும் இதுவரையில் வெளிவரவில்லை. ஆகையால் எமது ஊகத்தின் அடிப்படையில், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய ஓர் உள்ளக விசாரணை என்ற விடயம், அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத் தொடரில், அதிகமாக இம்மாதம் 30ம் திகதி முன்வைக்கப்படலாம்.

 

ஸ்ரீலங்காவை பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான விடயம். காரணம் ஸ்ரீலங்காவின் தீவிரவாத சிங்கள தலைவர்களும், தெற்கில் வாழும் மக்களும் –  புதிய ஜனதிபதியும், ரணில் விக்கிரமாசிங்காவின் புதிய அரசும், சிறிலங்காவை சர்வதேத்திற்கு, விசேடமாக அமெரிக்காவிடம் அடைவு வைத்துள்ளதாக கூறி பாரிய போராட்டங்களில் ஈடுபடலாம்.

 

அதே வேளை உள்நாட்டு விசாரணையை நடைமுறைப்படுத்தவிடாது இவர்கள் பல தடைகள் கஷ்டங்களை ஏற்படுத்துவார்கள். ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனதிபதி ராஜபக்ஷ மற்றும் இவரது சகோதரர் கோத்தபாயா, முக்கிய இராணு தளபதிகள் மீது ஸ்ரீலங்காவில் மிக இலகுவில் எந்த அரசினாலும் எந்த விசாரணையும் முன்னெடுக்க முடியாது என்பது ஸ்ரீலங்காவின் சரித்திரமும் யாதார்த்தமுமாகும்.

 

இவற்றை அமெரிக்கவோ, சர்வதேசமோ அறியாதவர்கள் அல்லா! இங்கு நான் சர்வதேசம் என்னும் பொழுது, இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேள்வி: அமெரிக்காவின் இந்த நகர்வுக்கான பின்னணி என்ன?

 

பதில் : சீனாவை சிறிலங்காவிலிருந்து அப்புறப்படுத்த, முன்வரும் புதிய ஜனதிபதி, புதிய அரசிற்கு, இந்தியாவின் உதவியுடன் அமெரிக்காவினால் கொடுக்கப்படும் ஓர் ஆறுதல் பரிசே உள்நாட்டு விசாரணை. இவற்றை முன்னொழியும் அமெரிக்காவும் சர்வதேசமும் சிறிலங்காவின் கபட நிலையை நன்கு அறிந்தவர்களே!

 

கேள்வி: இது குறித்து தமிழ்த் தலைமைத்துவங்களின் நிலைப்பாடு எவ்வாறாக அமையப் போகின்றது?

 

பதில் : நான் இங்கு கூறவிருக்கும் பதிலையிட்டு யாரும் கோபிக்க மாட்டார்களென நம்புகிறேன். தமிழ்த் தலைமை என்பது, விசேடமாக தமிழ் மக்களின் தாயாகப் பிரதேசமான வடக்கு கிழக்கின் தமிழ் தலைமைத்துவமும், இலங்கைதீவின் தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் பெறுமதி அற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகிறார்கள்! தேசிய அரசு என்ற போர்வையில், முழுச் சிங்களத் தலைமைகளும் ஒன்று திரட்டு நிற்கும் இவ்வேளையில் இவர்களால் என்ன செய்ய முடியும்?

 

அமெரிக்காவினால் ஓர் விடயம் முன்மொழியப்பட்டால், உலகின் முக்கிய நாடுகளும் அரசுகளும் அதற்கு அடிபணியும் நிலையில், தமிழ் தலைமையினாலும் தமிழ் மக்களினாலும் என்ன செய்ய முடியும்?

 

ஆகையால் இவர்கள் யாவரும் இந்த உள்ளக விசாரணையை தாம் ஏற்கவில்லையென வெளிப்படையாக அறிக்கை மூலம் வெளிப்படுத்திவிட்டு, அமைதி காக்கும் அதேவேளை, உள்ளக விசாரணை காரணமாக தெற்கில் நடக்கவிருக்கும்நடப்புக்களை சர்வதேசத்திற்கு உடனுக்கு உடன் அறிவிப்பதே தற்போதைய நிலையில் சாலச் சிறந்தது.

 

கேள்வி: தற்போது தமிழ்த தேசியக் கூட்டமைப்பு இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றது. தமிழரசுக் கட்சியின் கை ஓங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பின் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?

 

பதில் : அருமையான கேள்வி! உண்மையில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு 2010ம் ஆண்டு, திரு கஜேந்திரன் பொன்னம்பலம் குழுவினரால் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் இக் குழுவினர் தமக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு (த.தே.கூ.) சகுனம் பிழைத்தால் போதுமென்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் பிளவு படுத்துவதற்கான நாராதர் வேலைகளை இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக செய்து கொண்டிருக்கின்றார்கள். இதன் கரணமாக, இடையிடையில் கூட்டமைப்பில் மேலும் பிரிவுகள் உள்ளது போன்ற ஓர் நிலை ஏற்பட்டு வருகிறது.

 

இவர்களிடையே ஓரு சில விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், கடந்த பொது தேர்தலின் பின்னர், இவர்கள் யாரும் ஒரு பொழுதும் த.தே.கூ.லிருந்து பிரிந்து செல்ல விரும்ப மாட்டார்கள். அப்படி யாரும் பிரிந்து சென்றால், எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினமானது.

 

கேள்வி: கூட்டமைப்பில் ஒரு பகுதியினர் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றனர். மறுபகுதியினர் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறுகின்றனர். இதன் பின்னணி என்ன?

 

பதில் : நிச்சயம் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் அல்ல! காரணம் இவர்கள் இரு பகுதியினரும், வேறுபட்ட சொற்பதங்களை பாவிக்கிறாக்களே தவிர, இருவரும் சர்வதேச நீதியையே வேண்டி நிற்கிறார்கள் என்பது தான் உண்மை.

 

இவர்களது சர்ச்சையை மிகவும் சுருக்கமாக விளக்குவதனால் – ஆங்கிலத்தில்,‘இன்வேஸ்ரிகேசன்’(inஎநளவபையவழைn)இன்குவாரி’ (iஙெரசைல) என்ற இரு பதங்களிற்கும், நாம் தமிழில் விசாரணைஎன்ற ஒரு தமிழ் பதத்தையே பாவனையில் கொண்டிருக்கிறோம். ஆகையால் இவர்கள் இருவருக்கும் இடையில் சர்வதேச நீதிதவிர்ந்த வேறு பாரிய இடைவெளி காணப்படவில்லை.

 

கேள்வி: தேர்தல் முடிவுகள் வடமாகாணத்தில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே செய்தியாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், விஜயகலா மகேஷ்வரன் போன்றோருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கருதுகிறீர்களா?

 

பதில் : தமிழ் மக்களின் சிந்தனையில் நிச்சயம் மாற்றம் ஏற்படவில்லை!

 

2010ம் ஆண்டு த.தே.கூ.லிருந்து ஒரு குழுவினர் ஏதேச்சையாக பிரிந்து சென்றதிலிருந்து, தமிழ் தேசியம் என்பது இன்று ஓர் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

 

த.தே.கூ. பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், நீங்கள் பெயர் குறிப்பிட்டு கூறிய யாரும் எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதற்கு நல்ல ஊதரணமாக, த.தே.கூ. ஆறு வாக்குகளால் மட்டுமே, ஓர் ஆசனத்தை இம்முறை இழந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளலாம்.

 

கஜேந்திரன் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ், சுயேட்சையாக போட்டியிட்ட ஜனநாயக போராளிகள் ஆகிய இரு பிரிவினரும், த.தே.கூ. க்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை நாசமாக்கியுள்ளனர்.

 

கேள்வி: சிங்கள இராஜதந்திரம் தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெற்றியைப் பெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் தமிழர் தரப்பு தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்து வருவதற்கான காரணங்கள் என்ன?

 

பதில் : இங்கு தான் தமிழ் மக்களின் பலவீனம் நிரூபிக்கப்படுகிறது. நமது தமிழ் அரசியல் வாதிகள் சுதந்திரத்திற்கு முன்பும் பின்னும் எதையும் ஒழுங்காக உணர்ந்தவர்களாகவோ, படித்தவர்களாக காணப்படவில்லை.

 

மிகவும் சுருக்கமாக,“மோட்டு சிங்களவர்களெனதமிழர் கூறுவதை நாம் அவதானித்திருக்கிறோம்.  ஆனால் உண்மையான மோடர்கள்நாங்களே!

 

தமிழ் அரசியல்வாதிகள் மாறி மாறித் தமது சக தமிழ் அரசியல்வாதிகளைத் திட்டுவதிலும், பிழை பிடிப்பதிலும், காட்டிக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

 

சிங்களத் தலைவர்களும் இப்படியான வேலைகளில் ஈடுபட்டாலும், இலங்கைதீவில் தமிழர் விவகாரமென வந்தால் அவர்கள் வேறுபட்ட கோணத்தில் ஒற்றுமைப்பட்டுத் தமிழ் இனத்தை ஓரம் கட்டியும், அழித்தும் வருகிறார்கள். இவற்றை உணரத் தவறுபவர்கள் தான் இன்று பாரளுமன்றம் சென்று சகல சுகபோகங்களையும் அனுபவிக்க விரும்பும் தமிழ் அரசியல்வாதிகள்.

 

இந்நிலையில் தமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதே நிலை இன்னும் சில வருடங்கள் தொடருமானால், இலங்கைதீவில் தமிழ் மக்களின் அடையாளமே கேள்விக் குறியாகிவிடும்.

 

கேள்வி: தமிழ் மக்களின் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?

 

பதில் : இலங்கைதீவைப் பொறுத்தவரையில, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம் என்ற அடையாளத்தைக் கொண்டவர்கள். சர்வதேச வரைவிலக்கணத்திற்கு அடங்க தனிப்பட்ட மொழி, கலை, காலாச்சாரம், நிலப்பரப்பு, சரித்திரம் போன்றவற்றைக் கொண்ட ஓர் இனம், தேசிய இனமாகக் கணிக்கப்படுகிறார்கள். ஆயுதப் போராட்டம் நடந்த வேளையில், ஓர் நிர்வாகப் பிரதேசம், ஆயுதப்படையுடனான சகல கட்டமைப்புக்களையும் கொண்டவர்களாகவே தமிழர்கள் தமது தாயகப் புமியில் வாழ்ந்தார்கள்.

 

துரதிஷ்டவசமாக இவற்றை சர்வதேசத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கா அரசு அழித்து முடித்துள்ளது. ஆனால் கடந்த ஆறு வருடங்களாக நிலவும் நிலை, வடக்கு கிழக்கில் தொடருமனால், சர்வதேசத்தின் உதவியுடன் தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள் என்பது தவிர்க முடியாத ஒன்றாகும்.

 

ஆகையால் இன்னும் சில வருடங்களுக்குள் சிறிலங்காவின் சிங்களத்  தலைவர்கள், தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓர் சரியான முறையில், பாதையில் தீர்க்க முன்வரவல்லையாயின, இலங்கைதீவு நிச்சயம் மீண்டும் ஓர் அசாதாரண நிலைக்குள் தள்ளப்படும்.

 

கேள்வி: தமிழ் மக்களுக்கு ஒரு புதிய தலைமை தேவையா?

 

பதில் : தற்போதைய நிலையில் அப்படித் தேவைப்படுவதாகத் தென்படவில்லை. ஆனால் சோம்பேறி அரசியல் நடத்தும் சில தமிழ் அரசியல்வாதிகள், தமது சுயநலம் கருதி, ஓர் புதிய தலைமையை உருவாக்க எண்ணுகிறார்கள். தற்போதைய நிலையில் அப்படி ஒன்று நடக்குமாயின், இது நிச்சயம் தமிழர்களை அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்லும்.

 

ஓர் புதிய தலைமை தமிழ் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் அதுகடந்த காலங்களில்  70க்களில் உருவாகியது போன்று திடீரென உருவாகலாம். இவற்றிற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

கேள்வி: ஐ. நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் உறுப்புரிமை 2017 ஆம் ஆண்டுவரை இருக்காது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழர் விவகாரம் எந்தத் திசையை நோக்கிநகர்த்தப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளது என எதிர்பார்க்கின்றீர்களா?

 

பதில் : இது ஓர் கவலை தரும் செய்தி! ஐ.நா.மனித உரிமை சபையின் சரித்திரத்தை நாம் ஆராயுமிடத்தில், அமெரிக்காவின் முன்னைய ஜனதிபதி ஜோஜ் புஷ் ஐ.நா.மனித உரிமை சபையை முற்று முழுதாக பகிஷ்கரிந்திருந்தார். இக் காலப்பகுதிகளில் இலங்கைதீவில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடூர யுத்தத்தின் அனர்த்தங்களை, எந்த நாடும் சரியான முறையில் ஐ.நா.மனித உரிமை சபையில் பரிசீலிக்குமளவிற்கு சபையில் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

 

2009ம் ஆண்டு யூன் மாதம் முதல் அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை சபையில் அங்கத்துவம் பெற்று வந்துள்ளது. உண்மையில் இதன் பின்னர் தான் தமிழர் விடயங்கள் மிகவும் துரிதமாக்கப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று தீர்மானங்கள் ஸ்ரீலங்கா மீது நிறைவேற்றப்பட்டது.

 

அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை சபையில் இடம்பெறாத நிலையில், பிரித்தானியா அல்லது, புதிய அங்கத்தவராக வரவிருக்கும் கனடா, அமெரிக்காவின் செயற்பாடுகளில் அக்கறை கொள்ளலாம். ஆனால் இந் நாடுகளின் செல்வாக்கு மனித உரிமை சபையில், அமெரிக்கா போன்று இருக்க முடியாது.

 

கேள்வி: ஐ. நா தமிழர் விவகாரத்தில் நீதியான தீர்ப்பினை வழங்குமா?

 

பதில் : முன்பு நடைபெற்ற சில இன விடுதலைப் போராட்டங்களில் ஐ. நா. நீதியான தீர்புக்களை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு – எரித்திரியா, கிழக்கு தைமூர், கொசவா, தென் சூடான் போன்றவற்றை நாம் கவனத்தில் கொள்ளலாம்.

 

துரதிஷ்டவசமாக தமிழீழ விடுதலை போராட்டம் என்பது, தற்போதைய சர்வதேச சூழலில் ஓர் அணைந்த தீபமாகவே பார்க்கப்படுகிறது. இதனால், ஐக்கிய ஸ்ரீலங்காவிற்குள் சர்வதேச அனுசரனையுடனான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்காக சர்வதேச மட்டத்தில் முக்கிய புள்ளிகள் உழைப்பதை நாம் ; காணுகிறோம்.

 

என்னைப் பொறுத்தவரையில், கிடைக்கும் அரசியல் தீர்வை பெற்றுக் கொண்டு நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இல்லையேல் நாம் முன்பு போல் கவலைப்பட வேண்டிய நிலைகள் உருவாகலாம். அவ்வேளையில் இலங்கைத்தீவு ஓர் முழுச் சிங்களத்தீவாக மாற்றம் பெற வழிவகுக்கும்.

 

தற்போதைய நிலையில், எம்மிடம் பலமோ ஐக்கியமோ அறவே கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*