யார் தான் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்? இழப்பதற்கு ஒன்றுமில்லை + ஆனால் எங்கள் நிலத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கு.

‘பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்று மில்லை தங்கள் அடிமைச்சங்கிலிகளை தவிர ஆனால் அவர்கள் வெல்லுவதற்கோர் Gif 01பொன்னுலகம் காத்திருக்கிறது.” என்று மார்க்ஸ் சொன்னது போல தமிழ் மக்களாகிய எங்களுக்கு இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. காட்டிக்கொடுப்பதற்கும் எதுவுமில்லை. ஆனால் எங்கள் நிலத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கு. நாம் வாழ எங்களிடம் அற்புதமாக கலாச்சாரம், பண்பாடுகள் இருக்கின்றன. நாம் வாழ்வதற்காக மரணித்த மனிதநேயங்களின் நினைவுகள் எம்மை வாழ்ந்து காட்டும்படி உந்திக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் நாங்கள் சுயநிர்ணய ஜனநாயக அமைப்பாக சுதந்திரத்தோடு வாழ  எங்கள் பிரதிநிதிகளை பொறுப்போடு தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கிருக்கின்றது.
2009 மே 18 பின்னர் தமிழர் பிரதேசங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளாக,
1) மிகவும் மோசமான கலாச்சார பண்பாட்டு சீரழிவுகள்;.
ஒரு இனத்தின் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் சிதைப்பதன் மூலம் அந்த இனத்தின் சகல கட்டுமானங்களையும் சிதைத்து  இலகுவாக அவ்வினத்தை அழிக்க முடியும் என்பது உலக அறிஞர்கள் பலர் சொல்லிருக்கிற விடயம். இதனை உணர்ந்த எதிரி மிகவும் திட்டமிட்டு அதனை செயற்படுத்துகின்றான்.
2) மரபுவழிச் சமூகக்கட்டமைப்புகளின் சிதைவு
(தமிழ தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை 2015)
இளம்சமுதாயம் போதைவஸ்துக்கும் மதுபாவனைக்கும் அடிமைப்பட்டிருத்தல். சிறு சிறு குழுக்களாக மோதல்களில் ஈடுபடுதல்.
ஒரு இனத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து அதன் வளர்ச்சிக்கு பெரும்பாங்காற்றுபவர்கள் என்றுமே இளைஞர்கள். அவர்கள் இந்தமாதிரி பழக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அடிமைப்படுவதனால் தங்களை பற்றியும், தங்கள் சமூதாயத்தை பற்றியும் சிந்திக்க முடியாமல் போவதால் தங்கள் கல்வியறிவிலும், அறிவியல்சிந்தனைகளில் மேம்படாமல் அடுத்த சந்ததியானது அறிவுள்ளோரை தேடும் இனமாக, வழிகாட்ட யாருமில்லாத இனமாக மாறும் அபாயம் உள்ளது.
3) அளவில்லமால் நிறுவப்பட்டுக்கொண்டு போகும் புத்தர் சிலைகள்.
வடக்கு கிழக்கு மக்கள் மதநம்பிக்கைகளின் படி வாழக்கையை வாழ்பவர்கள். மாற்று மதங்களுக்கு மதிப்பு கொடுக்ககூடியவர்கள். அதிகமாக நிறுவப்படும் புத்தர்சிலைகள் நீண்டகால போக்கில் நம்பிக்கைகளை ஏற்படுத்தி மனம்மாற்றும் அபாயம் உண்டு;. அதேவேளை காலநீட்சியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடம் புத்தருக்குரிய சொந்த இடமாக, வரலாற்று ஆவணமாக மாறும் அபாயம் உண்டு.
(மியன்மார் நாட்டில் மக்கள் புத்தமதத்தை ஏற்றுகொண்டது போல)
4) விடுதலைக்கு போராடிய இனம் இன்று விடுதலையை பற்றி சிந்திக்க விடாமல் சிந்தனைகளை வெளிநாட்டு பணத்திலும், நவீன இலத்திரனியல் பொழுதுபோக்குகளிலும் வன்முறைப்பாலியல் சிந்தனைக்கான களங்களிலும் திருப்பிவிடப்பட்டுள்ளனர்.
முப்பது வருடங்களாக போராடிய எமது இனம் 2009 யுத்தம் முடிந்தபிறகு எமது போராட்டம் தோல்வியடைந்து விட்டது, எம்மால் இனியும் முடியாது என்று நினைப்பது தமிழ் வீரத்திற்கு இழுக்கானதாகும்.  ‘புரட்சி என்பது தனியாக களத்தில் நின்று போராடுவதும் அங்கே முடிந்ததும் முடிகின்ற விசயமல்ல சமூகம், மதம், கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம் என்று வாழ்வோடு தொடர்புடைய அனைத்து தளங்களோடும் புரட்சி தொடர்ந்து உரையாடுகின்றது. அனைத்தையும் திருப்பிபோடுகின்றது. மக்களுக்கு தேவையான அனைத்தையும் மீள் உருவாக்கம் செய்கின்றது.
(ஹோ சி மின் வியட்நாம்) 
கூறியது போல இழப்புகளாலும், தோல்விகளாலும் தளர்ந்து போயிருக்கின்ற இந்த மக்களுக்கு உயிரோட்டமான நம்பிக்கைகளை கொடுத்து அவர்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்வது அம்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமை. தனியே பதவிக்காக பிரதிநிதிகளாக இருந்து விட்டு அவ்வப்போது இராஜதந்திர ரீதியில் நாங்கள் நகர்வுகள் செய்கின்றோம் என்பதும், அறிக்கைகள், பேட்டிகள் கொடுப்பதும் பொறுப்புணர்வாக இருக்குமா?  என்பது சிந்திக்க வேண்டிய விசயமாகும்.
உலகத்தில் நடைபெற்ற நடைபெறுகின்று விடுதலைப்போராட்டங்களில் விடுதலையை வேண்டிநிற்கின்ற இனமானது தொடர்ச்சியாக போராடவிடாமல் எதிரியானவர்கள் சகல வழிமுறைகளிலும் அடக்கு முறைகளை கையாளுவார்கள். மக்கள் அவ்வடக்குமுறைக்குள் அகப்பட்டு சிந்தனை தளர்ந்து விடாமல் இருப்பதற்காக அவ்வினத்தின் தலைவர்கள், பிரதிநிதிகள், அறிஞர்கள் வழிகாட்டியாக இருந்து எத்தனையோ விடுதலைப்போராட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றது. எதிரியை குற்றம் சொல்லியும், அவன் எங்கள் கலாச்சாரம் பண்பாடுகளை சீரழிக்கின்றான் என்று கூக்குரலிட்டுக்கொண்டிருப்பதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொருந்தும் விடயமாகுமா?
2009 க்கு பின்னர், தமிழ் பிரதேசங்களில் நடக்கும் அத்தனை கலாச்சார சீரழிவுக்கும் ஒட்டு மொத்தமாக எதிரியை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களே!
மிகக்சிறிய நிலப்பரப்பை கொண்ட எமது பிரதேசத்தில் மக்களையும் இளம்சமுதாயத்தையும் மிக இலகுவாக சந்தித்து உரையாட முடியும். முப்பது வருடங்களுக்கு மேல் கைதுகள், காட்டிக்கொடுப்புகள், செல் வீச்சுகள், இடப்பெயர்வுகள், பொருளாதாரத்தடைகள் அத்தனையும் தாண்டி வீரத்துடன் போராடியவர்கள் ஏன் இப்படி மௌனமாக இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களின் வாழ்க்கையை தற்போது வாழும் சூழ்நிலையை ஊடுருவிச் சென்று அறியவேண்டும். அவர்களின் சிந்தனைகளை தளரவிடாமல் தெளிவுபடுத்த வேண்டும். இப்போது மக்களை தொடர்புகொண்டு பிரச்சாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்க வேண்டும். அதனை விடுத்து எதிரியை குற்றம் சுமத்துவது பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் கையாளாகும் தனத்தை காட்டிநிற்கின்றது.
ஆனாலும் தேர்தல் காலங்களில் சகல வழிமுறைகளையும் பயன்படுத்தி கூட்டாகவும் தனியாகவும் மக்களை தொடர்புகொள்வதனை பார்க்கும் பொழுது மக்களை விடுதலையை பற்றி சிந்திக்க அனுமதித்தால் தாங்கள் தொடர்ச்சியாக பிரதிநிதிகளாக இருக்க முடியாது என்ற அச்சம் காரணமாகவே மக்களை அப்படியே வாழ வசதிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழவே செய்கின்றது.
2009 க்கு பின்னரான இனவழிப்பு போன்ற செயற்பாடுகள்.
இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தால் மக்கள் கொல்லப்பட்டதை இனவழிப்பு என்று பிரகடனப்படுத்தி தாங்களும் மக்கள் பிரதிநிதிகளாக காட்டிக்கொண்டவர்கள். அவர்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற காலத்தில் தான் இளம்சமுதாயம் போதைவஸ்துக்கும், மதுபாவனைக்கும், வன்முறைப்  பாலியல் சிந்தனைகளுக்கும் அடிமைப்பட்டு சீரழிந்து செல்கின்றது. மக்கள் அறிவியல் ரீதியாகவும், தங்கள் சுய நிலைமை பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். சுய பொருளாதார முன்னேற்றங்கள் இல்லாமல் வாழ்வியல் நெருக்கடிகள் ஏற்பட்டு தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்றனர். அவற்றை பார்த்துக்கொண்டும் எதிரியின் மீது மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டும், அம்மக்களின் பிரச்சனையை நிவர்த்தி செய்யாமல் இராஜதந்திர நகர்வு என்று சொல்லிகொண்டு எதிரியின் கையேந்தி நிற்கும் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களால் தெரிந்தே செய்கின்ற இனவழிப்பு போன்ற செயலை யார் தான் பிரகடனப்படுத்துவது. அதனை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டிய அவசரநிலையில் இருக்கின்றோம்.
1970 காலப்பகுதிகளில் விடுதலைப்போராட்டங்களை ஆரம்பித்து தமிழ் மக்களுக்காக பல தடவை சிறை சென்றவர்கள் என்ற காரணத்தால் நாங்கள் தான் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்களே……
அதற்கு பிறகு முப்பது வருடம் தொடர்ச்சியாக யுத்தத்தை  நடாத்தி ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் தங்கள் உயிர்களையே தமிழ் இனத்திற்காக தியாகம்செய்திருக்கிறார்கள். தன்னுடய சொந்த பந்தங்களையும், தன் சொந்த அவயவங்களையும் இழந்து இன்று நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.
இப்படி ஒரு வீரம் செறிந்த உணர்வுமிக்க போராட்டத்தை நடாத்திய தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம் என்று பொறுப்புணர்வுடன் சிந்தியுங்கள். உங்கள் நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுத்துங்கள்.
விடுதலைக்காக போராடிய போராட வேண்டிய இனத்திற்காக அரசியல் செய்யும் கட்சிகளின் தலைவர்களே!
லெனின் கூறியது போல ஒவ்வொரு விடுதலையை வேண்டிநிற்கும் கட்சிகளும் தனிமனித வழிபாடுகளுக்கு இடம்கொடாமல் இராணுவகட்டமைப்பு போல கட்டுப்பாடுகளுடன் இருக்க வையுங்கள்.
”நம்முடைய கட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியாகும். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒவ்வோர் ஊழியரும் ஆழமான புரட்சிகர ஒழுக்கத்தை ,கொண்டிருக்க வேண்டும். கடும்உழைப்பு, சிக்கனம், நேர்மை, சுயஒழுக்கம், பொதுநலனுக்காக முற்றிலும் அர்ப்பணித்து கொள்வது, முற்றிலும் சுயநலமற்றிருப்பது ஆகிய குணங்களை வெளிப்படுத்த வேண்டும். நமது கட்சியானது முழுமையான தூய்மையை பாதுகாக்க வேண்டும். என்பதுடன் மக்களுடைய தலைவர், அவர்களுடய மிகவும் உண்மையான ஊழியன் என்ற தன்னுடைய பங்கை ஆற்ற தான் தகுதியானவன் என்பதனை நிரூபிக்க வேண்டும்.”
(ஹோ சி மின் வியட்நாம்) 
ஜப்பான், பிரான்ஸ், அமொரிக்கா என்ற மூன்று பலம் பொருந்திய நாடுகளுடனும் நேரடியாக களத்தில் நின்று போராடி வியட்நாமுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்த மாபெரும் தலைவர் தன் கட்சி தொண்டர்களுக்கு கூறியதை நான் இங்கு குறிப்பிடுகின்றேன். எனவே எங்களை போன்று விடுதலையை வேண்டிநிற்கின்ற இனத்திற்கும் இது தகும் என்பதில் ஜயமில்லை.
தமிழ்நேயன்
Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*