சிறப்புப்பார்வை : இலங்கையின் காலத்தின் களம் – திசைவன்

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் சுவாரஸ்யமான அரசியல் மாற்றங்கள் உலகnew-Gif கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பி விட்டிருக்கிறது. அல்லது உலக வல்லரசுகளின் தத்துரூபமான அரசியல் காய் நகர்த்தல்கள் இலங்கையின் அரசியலை சுவாரஸ்யமாக்கியுள்ளது என்றே கூறலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்ததன் மூலம் இலங்கையில் நடைபெற்று வந்த இனப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதிகளை அழித்து விட்டேன் என்ற மமதையில் உலக வல்லரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் சேர்ந்து உலகத்தின் சக்தி மிக்க தலைவனாக காட்டி கொள்ள முனைந்த மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் அதிகாரத்தொனி கடந்த ஜனவரி 8ம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

மிகப்பெரிய இனப்படுகொலையை நடாத்தி மக்களுக்கு கடும் வேதனைகளையும் இழப்புகளையும் கொடுத்த மகிந்தாவை எப்படியாவது தோற்கடிக்க நினைத்த தமிழ்மக்கள் மைத்திரிசேனாவுக்கு வாக்களித்ததன் மூலம் மகிந்தவின் தோல்விக்கு வித்திட்டனா் ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 110 தொகுதிகளில் 90 தொகுதிகளில் மகிந்த வெற்றி பெற்றிருக்கிறார். பெரும்பான்மை சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றது மிகவும் கவனத்துக்குரிய விடயமாகும். இந்த வாக்குகளை மகிந்தவுக்கு அளித்ததன் மூலம் சிங்கள மக்கள் உலகத்திற்கு தெளிவான சில செய்திகளை சொல்கின்றனா்.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நியாயமானது என்றும், தமிழர்கள்  தனிநாடு கேட்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தாங்களே இலங்கையின் தனி இனம், தங்களுக்கு தான் இலங்கை சொந்தமானது என்றும் இதன் மூலம் உலகுக்கு அறிவித்திருக்கதிறார்கள்.

சிறுபான்மை இனங்களின் வாக்குகளை கூடுதலாக பெற்று ஜனாதிபதியான மைத்திரிசிறிசேனாவின் பதவியானது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் நீடிக்குமா என்பது சந்தேகமே?

இந்திய அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியை அமைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகின்ற சிறிசேனா ஐ.நாவின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை பிற்போட செய்தது சிறு வெற்றியை அளித்தாலும் மீண்டும் மகிந்தவின் வழியில் சீனாவுடம் கைகோர்த்து நிற்பது சிறிசேனாவின் வெற்றிக்கு வழி வகுத்த நாடுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்ற விசயமாகும். அதே நேரம் முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபை இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என அதன் வழியிலே ஜ.நா போர்குற்ற விசாரணையை செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இதனால் கடும் நெருக்கடியில் சிறிசேனா அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தெளிவான விசயம். தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்தாலோ அல்லது அவர்கள் கேட்பதுக்கு சில தீர்வுகளை செய்து கொடுத்தாலோ அடுத்த பாராளுமன்ற  தேர்தலில் மகிந்த வருவது உறுதியாகிவிடும் நிலையில் வடமாகாணசபை நிறைவேற்றிய இத்தீர்மானம் மிகவும் வரவேற்றுத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அதே வழியில் இறுகப்பிடித்து தொடர்ந்து செல்வார்களா தமிழ் தேசிய கூட்டடைமப்பு என்பது கேள்விக்குறி?

சிறிசேனா அரசு இந்த தீர்மானத்தை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ அவர்களின் வாக்கு வீதம் நிச்சயமாக குறையும். அதாவது இத்தீர்மானத்தை ஆதரித்து 2009 இல் நிகழ்ந்தது  ஒரு இனப்படுகொலையே என்ற அடிப்படையில் ஐநாவுக்கு உறுதியளித்தது மாதிரி போர்க்குற்ற விசாரணையை இலங்கையில் உள்ளக விசாரணையை நடாத்த தீர் மானித்தால் அல்லது ஐ.நாவின் போர்குற்ற விசாரணைக்கு சம்மதித்தாலோ சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும். இதன் மூலம் அடுத்த தேர்தலில் தோற்க கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆனால் அதை செய்யாது வடமாகாணசபையின் தீர்மானத்தை ஏற்காது இருந்தால் வடக்குகிழக்கு மக்களின் வாக்கு வங்கியில் குறைவு ஏற்பட சாத்தியமிருக்ககின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது வடக்குகிழக்கு வாக்குகள் மட்டுமே அவரின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்தது எல்லாரும் அறிந்த விடயம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை தொடாந்தும் திறம்பட செயற்படுத்துமா தமிழர்களின் எதிர்கால வாழ்வை சரியான முறையில் தீர்மானிக்க கூடிய அரசியல் நகர்வுகளை உலகவல்லரசுகளுடன் இணைந்து சர்வதேச போக்குக்கமைய காய் நகர்த்தி சிங்களத்தை சிக்கலான நிலைக்கு தள்ளுவர்களா, தமிழ் மக்களின் பிரச்சனையை பேரம்பேசி தீர்க்கக்கூடிய நிலைக்கு தங்களை வழப்படுத்தி சர்வதேச அரங்கில் சாணக்கியத்துடன் நுழைவர்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதொன்றாகவிருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் மிக முக்கியமான கடமையாக அது இருக்கிறது. இருந்தாலும் மீண்டும் மைத்திரி அரசு பாராளுமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டுமாயின் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயமானதொன்றாகிறது.

இலங்கையின் தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்து தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இன்று இலங்கையிலும் சரி, சர்வதேச அரங்கிலும் சரி பேசக்கூடிய சக்தியாக இருக்கிற கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அதை உணர்ந்து செயற்படவேண்டிய முக்கியமான தருணத்தில் இன்றைய அரசியல் களம் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து பார்த்தால் வடமாகாணசபையின் தீர்மானம் இலங்கையில் மீண்டும் சிங்கள இனவாதிகளின் தலைவனாக விளங்குகின்ற மகிந்தாவின் பிரசன்னத்தை தான் உருவாக்கியிருக்கிறது. ஒரு வேளை சிறிசேன அரசு மகிந்தவை  தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஏதாவது செய்தால் அன்றி, ஆனாலும் மகிந்தவை தலைமை ஏற்று  தேர்தலில் போட்டியிடும் படி தற்போது கேட்டு கொண்டுக்கும் சிறிசேனா கூட்டணி தவிர்ந்த மற்ற கூட்டணிகளுக்கு மகிந்த ஆதரவளித்தால் சிறிசேனா அரசு தோற்றுபோக கூடிய நிலை உருவாகும். தற்போது சிறிசேனா அரசு ராஜபக்ஷ சகோதரர்களை எப்படியாவது தேர்தலில் போட்டியிடாதவாறு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தங்களின் 100 நாள் திட்டத்தை மறந்து அவர்களின் கார்கள், சொத்துக்கள், ஊழல்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க முழுநேரத்தையும் செலவிடுகின்றது.

தொடர்ந்து, மகிந்த தேர்தல் களத்தில் வேட்பாளராக களம் இறங்கும் நிலை ஏற்படுமாயின் அவர் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் வேளையில் ஓரு வேளை அவர் வென்றால் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் நிலை என்னவாகும்? மீண்டும் அவர் முன்னையமாதிரி விஸ்வரூபம் எடுத்து நிற்பாரானால் 2009 ல் அழிவை விட மோசமான அழிவு இலங்கை சிறுபான்மை இனங்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அத்தோடு அவர் மீண்டும் தனது உற்ற நண்பர்களான சீனா பாகிஸ்தானுடனும் கைகோர்க்கும் நிலை இருக்கிறது.அந்த வேளையில் அமெரிக்கா இந்திய வல்லரசுகளுக்கு இலங்கையில் அதிகாரத்தை செலுத்துவதற்கும், தங்களுடய இந்து சமுத்திரத்திற்கான ஆதிக்க பணிகளுக்கும் ஓரே இடமாக இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணம்தான் மிஞ்சியிருக்கும். அப்படியான நிலைக்கு இலங்கையின் அரசியலை கொண்டு செல்ல கூடிய வகைக்கு TNA தனது அரசியல் நகர்வுகளை நகர்த்துமா? தமிழ்மக்களுக்கு தேவையானதை உலக நாடுகளிலிருந்து பெற்று கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேணும்.

எது எப்படியாக இருந்தாலும் வடமாகாணசபையின் தீர்மானம் புதிய அரசுக்கு பெரும் தலையிடியை கொடுத்திருக்கிற விடயமாக இருக்கிற வேளையில் உலக நாடுகளுக்கும், மனிதஉரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கும் மனச்சாட்சியை தட்டிகேட்கின்ற விடயமாகதான் இருக்கின்றது. மனச்சாட்சியின் படி உலகநாடுகள் போர்க்குற்ற விசாரணையை நடாத்த உதவுமா? அல்லது தொடர்ந்தும் ஆதிக்க ஆசையில் தமிழர்களின் எதிர்காலத்தை இருட்டறையில் தள்ளுமா?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வடக்குகிழக்கு மாகாணத்தில் வெல்லக்கூடிய சக்தியாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு  தமிழ்மக்களின் நியாயமான கொள்கைகளை நிபந்தனையாக வைத்து இலங்கையின் ஆட்சியை தீர்மானிக்குமா? அல்லது இலங்கையின் அரசியல் தந்திரோபாய நீரோட்டத்தில் காணமல் போய்விடுமா????

  எழுத்தாக்கம்-திசைவன்

600x150-benner11

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*