ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்தார்:தொண்டர்கள் வெடிகளை வெடித்து ஆராவாரம்

சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதிnew-Gifஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதித்தது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்ஹாவிடம், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவின் நகல் இன்று காலையில் அளிக்கப்பட்டது.

இதனைப் பரிசீலித்த நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் விடுவிப்பதற்கான ஆணையை வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு பேர் வீதம், மொத்தம் 8 பேர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உத்தரவாதத்தை அளித்தனர்., ஜெயலலிதாவுக்கு ஜெயபால், குணஜோதி ஆகியோர் உத்தரவாதப் பத்திரத்தை அளித்தனர்.

பிற்பகல் இரண்டரை மணியளவில் இந்த உத்தரவின் நகல் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் மூன்றேகால் மணியளவில் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையிலிருந்து வெளியில் வந்தனர்.

சிறை வளாகத்தில் இருந்து வெளியேவந்த ஜெயலலிதாவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள், எம்எல்ஏக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் பரப்பன அக்ரஹாரத்தில் காத்திருந்து வரவேற்றனர்.

பிற்பகல் நாலே கால் மணியளவில் தனி விமானம் மூலம் பெங்களூரிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார் ஜெயலலிதா.

அவரை வரவேற்க, விமான நிலையத்திலிருந்து அவரது இல்லம் இருக்கும் போயஸ் கார்டன் வரை சுமார் பதிமூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் சாலையோரமாகத் திரண்டிருந்தனர். சாலையில் இருபக்கங்களிலும் அவரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

சென்னை நகரத்தில் காலையிலிருந்தே மழை பெய்துவந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் சாலையோரமாக குழுமியிருந்த தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

போயஸ் கார்டனிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்தனர். ஜெயலலிதாவை வரவேற்க மேள தாளங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனமழையையும் பொருட்படுத்தாது குழுமியிருந்த தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

ஜெயலலிதா, வழியெங்கும் தொண்டர்களுக்கு கையசைத்தபடி மெதுவாக வந்ததால், சுமார் ஆறு மணியளவில் தான் தனது இல்லத்தை வந்தடைந்தார்.

பல இடங்களில் அவரது வாகனம் மீது பூ தூவப்பட்டது.

ஜெயலலிதா அவரது இல்லத்தை வந்தடைந்தபோது மழை சற்று ஓய்ந்திருந்ததால், தொண்டர்கள் வெடிகளை வெடித்து கொண்டாடியபடியே இருந்தனர்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*