யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புனரமைக்கப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டை திறப்புவிழா

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புனரமைக்கப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டையில் ஏழு வர்த்தகர்கள் new-Gifமாத்திரமே தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தற்போது முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 24 கைத்தொழில்களை ஆரம்பித்துச் செயற்படுத்தத் தக்கவகையில் இந்தத்தொழிற்பேட்டைக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தக் கைத்தொழிற்பேட்டையின் மூலம், 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், சுமார் பத்தாயிரம் பேர் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று இதன் திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கூறியிருக்கின்றார்.

இதற்கென இந்தியா 225 மில்லியன் ரூபாயையும், இலங்கை 50 மில்லியன் ரூபாயையும் செலவு செய்திருக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா சகிதம் இதனை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான இந்த பேட்டையின் மீள் எழுச்சியானது பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு உகந்த பொருளாதார சூழலைக் கொண்டிருக்கவில்லை என்று யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றத் தலைவர் கனகசபை பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

கடன் பளு காரணமாக யாழ்ப்பாணத்தில் சுமார் 15 வர்த்தகர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த பின்னணியில் மீளமைக்கப்பட்டிருக்கும் அச்சுவேலி தொழிற்பேட்டையின் எதிர்காலச் செயற்பாடுகள் கேள்விக்குரியதே என்று தெரிவித்தார்.

கடந்த 1970களில் ஆரம்பிக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையானது, யுத்த மோதல்கள் தீவிரமடையும் வரையில் சிறப்பாகச் செயற்பட்டு வந்துள்ளது. எனினும் இன்றைய வேகம் மிகுந்த பொருளாதாரச் சூழலில் இதனுடைய செயற்பாடு எந்த வகையில் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து பொருளியல் நிபுணரும், பருத்தித்துறை பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஆய்வாளருமாகிய முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை நாட்டின் தென்பகுதியுடன் இணைக்கின்ற ஏ-9 நெடுஞ்சாலைக்கு அருகிலோ அல்லது ரயில் நிலையத்தை அண்டியோ அமையாத இந்த கைத்தொழிற்பேட்டை சந்தை வாய்ப்புக்குரிய போக்குவரத்து வசதிமிக்க ஓரிடத்தில் ஏன் அமைக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் அவர் வினா எழுப்பினார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*