யாழ் மாவட்டத்தில் 11 வயது பாடசாலைச் சிறுமி தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவு

யாழ் மாவட்டம் காரைநகர் பிரதேசத்தில் உள்ள ஊரி என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த 11 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் பள்ளிக்குச்சென்ற போது   new-Gifஅவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக இலங்கை கடற்படைச் சிப்பாய் ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவி பாடசாலைக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டிருந்ததைப் பெற்றோரும் உறவினர்களும் அறிந்திருக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவி பாடசாலைக்குத் தொடர்ச்சியாக வருகை தாரதிருந்ததை அவதானித்த பாடசாலை நிர்வாகம் அது குறித்து பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரும் அதிகாரிகளும் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து உண்மை நிலைமை வெளிச்சத்திற்கு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமி உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் நெருங்கிய உறவினரான மற்றொரு 9 வயது சிறுமியும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகத்தையடுத்து, அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்களை அறிவதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், சரவணபவன் ஆகியோர் காரைநகர் ஊரி கிராமத்திற்குச் சென்று உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளனர்.

இந்த ஊரில் இருந்து பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதானாலும், ஊர் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதானாலும், ஆளரவமற்ற பாதையின் ஊடாக கடற்டைபயினருடைய காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைக் கடந்தே செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் இந்த சிறுமிகள் மட்டுமல்ல பெண்களும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும், கடற்படையினரின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அங்கு பெரும் அச்சத்துடன் வாழ்வதாகத் தம்மிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக உரிய தரப்புக்களுடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

140717174556_jafna_child_abuse_624x351_bbc_nocredit

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*